புதன், 11 மே, 2022

சாணி காயிதம் ...லாஜிக் , திரைக்கதை , ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அராத்து

Saani Kaayidham Review | சாணி காயிதம் | Yessa ? Bussa ? | Keerthi Suresh |  Arun | Filmibeat Tamil - YouTube

Araaathu R :  சாணி காயிதம்.  ராக்கியும் இப்படித்தான் எடுத்திருந்தார். லாஜிக் , திரைக்கதை , ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இதையும் அப்படியே எடுத்திருக்கிறார்.என்ன ? படத்தில் செல்வராகவன் , கீர்த்தி சுரேஷ் இருப்பதாலும், படம் ஓடிடியில் கிடைப்பதாலும் உலக்கை  சினிமா ரசிகர்களும் , விஜுவல் லாங்க்வேஜ் ரசிகர்களும் லேசாக சிலிர்த்துப் பார்க்கிறார்கள்.


சிலரிடம் நல்ல கதை , திரைக்கதை இருக்கும். அவர்களுக்கு படம் எடுக்கத் தெரியாது. இவருக்கு படம் எடுக்கத் தெரிந்திருக்கிறது. அதுவும் ஒரே ஸ்டைலில். ஆனால் மற்ற ஏரியாக்களில் வீக். வீக் என்று கூட சொல்ல முடியாது. ஆர்வமில்லை அல்லது தெரிவதை வைத்து ஒப்பேற்றி விடலாம் என்ற விட்டேற்றித்தனமாகக் கூட இருக்கலாம்.
மொதல்ல நாலைஞ்சி கொலைய பண்ணுவோம். சித்ரவதை பண்ணிப் பண்ணுவோம். ஒவ்வொரு கொலையும் 15 நிமிஷம் . ஒரு மணி நேரம் ஃபுட்டேஜ் ரெடி. அப்புறம் நடந்து போறது வர்ரது , லாங்க் ஷாட் , பழய சீனை  அங்கங்க பிளாக் அண்ட் வொயிட்ல காட்னா 30 நிமிஷம் ஃபுட்டேஜ் ரெடி.
சம்மந்தம் இல்லாத வசனம் கொஞ்சம் . ஒரே ஷாட்ல மொழ நீள வசனம் கொஞ்சம்.
கிட்டத்தட்ட 80 % ஃபுட்டேஜ் ரெடி.
நச்சுன்னு ஒரு ஆக்‌ஷன் பிளாக். இதுக்கு நடுவுல கொஞ்சூண்டு கதை. படம் ரெடி. இந்த கால்குலேஷனில் தான் படம் எடுத்திருப்பார்கள் போல.
இதுக்கு நடுவுல ஒடுக்கப்பட்டவன் , ஏழை என பூத்துவல் தூவினா ஒரு பய வாயைத் தொறக்க மாட்டான். அறிவு ஜீவிக் கூட்டமும் , “ஒடுங்கியிருக்கும் உள் மனம் வெடித்துக் கிளம்பும் போது “ என ஆரம்பித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதும்.
இப்போதே வன்முறையின் அழகியல் என சில இலவம் பஞ்சுகள் கற்றில் பறக்க ஆரம்பித்து இருப்பதைக் காண முடிகிறது.
வன்முறையின் அழகியல் , குற்றத்தின் அழகியல் எல்லாம் வழக்கொழிந்து போன சொற்றொடர்கள். ஒரு காலத்தில் ஃபிரான்ஸில்  வைன் அருந்திய தொப்பையோடு , எவளாவது கால் கேர்ளை சித்ரவதை செய்து விட்டு , அதற்கு இலக்கிய முலாம் பூச எழுதப்பட்டவையாக இருக்கலாம்.
இப்போதெல்லாம் செயின் திருட்டின் அழகியல் , வன்புணர்வின் அழகியல் என்றெல்லாம் பஜனை செய்தால் செருப்படி விழும்.
ஒடுக்கபப்ட்ட கீர்த்தி சுரேஷ் செவப்பாக இருக்கிறார் என்றால் பொதுப்புத்தி என திட்டுவார்கள். செவப்பு இல்லை ஐயா பிரச்சனை. அதை எப்படி சொல்வது எனத் தெரியாமல் செவப்பு என விமர்சிக்கிறார்கள் பொதுமக்கள். ஒரு காட்சியில் கீர்த்தி சுரேஷின் தோழி கீர்த்தியிடம் பேசுவார். அவருக்கும் இவருக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா ? ஏன் தோழியை மட்டும் கறுப்பாக எளிமையாக , வெள்ளந்தியாக வைக்கிறீர்கள் ? கீர்த்தி சுரேஷின் கணவர் ஏன் கறுப்பாக ஒழுங்கில்லாத தாடியுடன் இருக்கிறார் ? அந்த சிறுமியும் ஏன் கிராமத்து நிறத்துடனேயே இருக்கிறார் ? அப்ப யாரிடம் பொதுப்புத்தி இருக்கிறது ? கீர்த்தி சுரேஷ் மட்டும் கதைக்கு நடுவே மாடல் போல வந்து,  அவன் இவன் படத்தில் பாலா காமடி போலீஸ் கேரக்டரில் ஒரு ஹீரோயினை போட்டு இருப்பார், அது போல சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போகிறார்.
செல்வராகவனுக்கு என்னதான் டிராயர் போட்டு தாடி வளர்த்து விட்டாலும், 5 ஸ்டார் ஹோட்டலில் அமர்ந்து மீட்டிங்க் இன்னும் முடியலையா என வாட்ச் பார்க்கும் ஸ்டைலில் தான் வாட்ச் பார்க்கிறார்.
அதனால் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது பூத்தூவல் என்கிறேன். இது ஒரு குறுக்கு வழி. இந்த சாதி , வர்க்க முலாம் இல்லாமலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கலாம் . ஆனால் இவைகள் இப்போது நன்றாக விற்பனையாகும் கமாடிட்டி ஆகி விட்டதால் , அதைப்பற்றிய ஒரு புரிதலும் இல்லாதவர்களும் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். விமர்சனத்தில் இருந்து தப்பிக்க இது ஒரு எளிய வழியாக ஆகி விட்டது.
ஒரு ஃபேண்டஸி கதை எடுத்தால் இதைப்போன்ற ஃபிரேம்கள் வைத்து ,இதைப்போன்ற விஷுவல்கள் கொடுக்கலாம். இது ஒரு சமூகக் கதை. உண்மையாகப் பழி வாங்கும் கதை. இதை ஒரு ஃபேண்டஸி விஷுவல் மொழியில் கொடுத்து இருப்பதுதான் பிரச்சனை. உங்களுக்கு ஃபேண்டஸி ,கவிதைத்தனமான திரைமொழிதான் தெரியும் என்றால் அதற்கேற்ற கதையைப் பிடிக்க வேண்டும். அதை விட்டு விட்டு கரகாட்டக்காரன் கதையை வைத்துக்கொண்டு மிஷ்கின் திரைமொழியில் எடுத்து டார்ச்சர் செய்யக்கூடாது.
படத்தில் ஒரே ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.
அந்த சாதி வெறியும் ஆணாதிக்கத் திமிரும் கொண்ட கிழவர்கள் அடி வாங்கும் போதும் , கொலை செய்யப்படப்போகிறோம் என்று தெரிய வருகையிலும், சாகும் போது கூட , அழுவதில்லை , கெஞ்சுவதில்லை . அதைவிட அப்போதும் கீர்த்தியை பொட்டை என்று அசிங்கப்படுத்துவதும் , கேவலப்படுத்துவதுமாகவே இருக்கிறார்கள். அந்த வெறி அப்படித்தான் செய்ய வைக்கும். உண்மையில் செத்தாலும் கீர்த்திக்கு அவர்கள் எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை.
இதை இயக்குநர் தெரிந்து வைத்தாரா ? அல்லது ஆங்கிலப் படங்களில் வில்லன்கள் அழுவாமல் கெஞ்சாமல் , ஸ்டைலாக சாவதை அப்படியே வைத்தாரா என்று தெரியவில்லை. மற்ற அனைத்து விஷயங்களும் போலியாகவும் , வெளிநாட்டு படங்களின் பாதிப்புகளோடும் இருப்பதால் இந்த சந்தேகம் வருகிறது.
பி.கு : கீர்த்தி சுரேஷுக்கு அடிக்கடி முந்தானை சரிந்து விழுவது என்ன குறியீடு என தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: