திங்கள், 9 மே, 2022

திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார்

hindu tamil : திருச்சி: திமுக எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைய போவதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தந்தை ஏற்கவில்லை
கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால், கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.

மேலும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தைகளையும் எனது தந்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு திமுகவில் எந்த பதவியும் கிடைக்காமல் தடுப்பதில் எனது தந்தையும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியும்கூட, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவில் மேல்மட்ட நிர்வாகிகளின் போக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், இப்போது வேறு மாதிரியாகவும் உள்ளது. ஆட்சியில் இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை தற்போது கண்டுகொள்ளவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை தூக்கிப்பிடித்து பதவி வழங்குகின்றனர். ஆனால், பரம்பரை கட்சிக்காரர்கள் மதிக்கப்படுவதில்லை. கட்சியின் கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விரக்தி நிலவுகிறது. இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் திமுக அழிந்துவிடும்.

எனவேதான், தொலைநோக்கு பார்வையின்படி பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளேன். அந்தக் கட்சி தான் நாட்டை வலிமையாக்கி, வளப்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி அமையும். எனவே வரும் 10-ம் தேதி மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் சேர உள்ளேன். பதவி, அடையாளத்துக்காக நான் அங்கு செல்லவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: