சனி, 16 அக்டோபர், 2021

சசிகலாவை தடுக்கும் நோக்கத்தில் ..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

 tamil.asianetnews.com  - Ezhilarasan Babu  : ஒரு வேளை சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தால், அவரை தடுக்கும் நோக்கில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ் பாபு பெஞ்சமின், பா.வளர்மதி உள்ளிட்டோர் அதிமுக அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா இன்று வருகை தந்ததை யொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 15 பவுன்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் நோக்கி வரும் பட்சத்தில், அவரை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறையிலிருந்து விடுதலையானயாகி எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.


உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து, அதிமுக சீரழிவதை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்த சசிகலா, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வாகனம் மூலம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அவரை வரவேற்க மெரினாவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் செல்வி ஜெயலலிதா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் நினைவிடத்தில் அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டு வந்தேன், நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அம்மாவிடம் கூறிவிட்டு வந்து இருக்கிறேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் செல்கிறேன் என கூறினார். இதனையடுத்து நாளை, அதிமுக பொன் விழா ஆண்டு துவக்க விழாவையொட்டி, சென்னை  தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லம், ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு அவர் அஞ்சலி செலுத்த இருக்கிறார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.அவரின் இந்த அதிரடி அரசியல் பிரவேசத்தால் அதிர்ந்து போயுள்ள இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனது கட்சித் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் எதர்க்கும் தயாராக இருக்கும்படி அலர்ட் செய்துள்ளது.

இந்நிலையில் எந்த நேரத்திலும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரக்கூடும் என தகவல் பரவியதால், ஒரு வேளை சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தால், அவரை தடுக்கும் நோக்கில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ் பாபு பெஞ்சமின், பா.வளர்மதி உள்ளிட்டோர் அதிமுக அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுடன் 15 பவுன்சர்கள் ஒரே சீருடையில் அங்கு வந்திருந்தனர். அதோடு 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அதிமுக அலுவலக முகப்பில் இருக்கை போட்டு அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: