ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நள்ளிரவில் பொன்னார் கைது! திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை வழக்கு பதிய கோரிகை

திமுக எம்.பி மீது வழக்கு பதிய வேண்டும்: நள்ளிரவில் பொன்னார் கைது!

மின்னம்பலம் : நெல்லை மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் நேற்று (அக்டோபர் 9) நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட நாளான 9ஆம் தேதிக்கு முதல் நாள் 8ஆம் தேதி நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டாரத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் பாஜக வட்டாரத் தலைவர் பாஸ்கர் என்பவர் தன்னை திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் திமுகவினர் தாக்கியதாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதையடுத்து பாஸ்கரை தாக்கிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால், பாளை அரசு மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று பாஸ்கரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
 கிட்டத்தட்ட பாஸ்கரை டிஸ்சார்ஜ் செய்யும் முடிவுக்கு டாக்டர்கள் வந்துவிட்ட நிலையில், “பாஸ்கரை டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது. அப்படி செய்தால் நான் போராட்டத்தில் இறங்குவேன்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் டாக்டர்களிடம் எச்சரித்ததாகத் தெரிகிறது.

எப்படியும் இன்று (அக்டோபர் 10) காலை பாஸ்கரை டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள் என்பது உறுதியானதால் நேற்று இரவுக்குள் எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், “இரவு 10 மணிக்குள் பாஜக நிர்வாகி பாஸ்கரை தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிக் கும்பல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவில்லை எனில் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி சிலை அருகே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று எச்சரிக்கை விடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆனால் மருத்துவர்களிடம் ஆலோசித்த போலீஸார், இதுபற்றி ஏதும் நடவடிக்கை எடுக்காததால், இரவு 10.30 மணிக்கு மேல் நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு பொன்னார் தலைமையில் பாஜகவினர் திரண்டனர். திமுக எம்.பி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். நள்ளிரவிலும் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கே சென்ற மாநகர சட்டம் - ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாஜகவினரோடு பேசினர். “விடிவதற்குள் எம்.பி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று பொன்னார் வலியுறுத்தினார்.

ஆனால் துணை கமிஷனர் சுரேஷ்குமார், “திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் நள்ளிரவில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர் போலீஸார்.

-வேந்தன்


கருத்துகள் இல்லை: