ஞாயிறு, 10 அக்டோபர், 2021

அரசை விமர்சனம் செய்யுங்கள் .. ஆனால் சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலைஞர் செய்திகள் : “அரசை பாராட்டி எழுத சொல்லவில்லை. விமர்சனம் செய்யுங்கள், மனதார ஏற்போம். சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் வார தொகுப்பு ஆக பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்(Merchants of madras)” திங்கட்கிழமை தோறும் ஒவ்வொரு வாரமும் வெளிவர உள்ளது.


"மெர்சண்ட்ஸ் ஆப் மெட்ராஸ்" என்ற சிறப்பு தொகுப்பு வாரந்தோறும் நாளிதழுடன் வெளிவர உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய வர்த்தகம் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் வணிகத்தில் சாதனை செய்த நிபுணர்களின் அனுபவங்கள் சாதனைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற உள்ளது.
தமிழகத்தை பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லும் அளவிற்கு இந்த இதழின் தொகுப்பு உறுதுணை புரியும் வகையில் இருக்கும். திங்கட்கிழமை தோறும் தொகுப்பு வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிறப்பு தொகுப்பை இன்று துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2008ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை முதல் பதிப்பை முத்தமிழ் அறிஞர் கலைஞர் துவக்கி வைத்தார். அப்போது முத்தமிழ் அறிஞர், டைம்ஸ் ஆஃப் இந்தியா என்னை கவர்ந்த பெயர் என்று கூறி, வாழ்க, வளர்க என்று வாழ்த்தினார்.

இன்று 13 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் வளர்ந்ததால் தான் என்னை தற்போது அழைத்து உள்ளீர்கள். நானும் உங்களை வாழ்க, வளர்க என்று வாழ்த்துகிறேன். இத்தனை நாள் ஒரு பத்திரிகை வளர்வது எளிதல்ல. அச்சு தொழில் சுலபமானது இல்லை. பள்ளி காலம் முதல் முரசொலியில் பணியை செய்வதைக் கடமையாக கொண்டிருந்தேன். நாளைய தினம் என்ன செய்தி வரப்போகிறது என்பதை அறிந்து செயல்பட்டு வந்தேன்.

எனவே இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு பத்திரிகையாளனாக வந்துள்ளேன். வடமாநில செய்திகளை அதிகம் இடம்பெற செய்வதை விட, தமிழ்நாடு செய்திகள் இடம்பெற செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களையும், உள்ளடக்கிய வளர்ச்சி இருக்க வேண்டும். அதை முன்னிறுத்தி தான் தமிழகத்தின் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல், அதை நோக்கித்தான் எல்லாத் திட்டங்களும் உள்ளன. தி.மு.க ஆட்சியமைந்த பிறகு தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்வு அடைந்துள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரம், உள்ளிட்டவற்றில் வளர்ச்சி அடைய வேண்டும். உள்கட்டமைப்பில் வளர்ச்சி அடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொழில்களையும் தொடங்க சாதகமான சூழல் உள்ளது. கொரோனா, தமிழக வளர்ச்சி உள்ளிட்டவற்றில் தமிழகம் இந்தியாவின் கவனத்தை பெற்று உள்ளது. அரசை பாராட்டி எழுத சொல்லவில்லை. விமர்சனம் செய்யுங்கள், மனதார ஏற்போம். சிறிய பிரச்சினைகளை எழுதி, பெரிய வளர்ச்சிகளை மறைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: