செவ்வாய், 12 அக்டோபர், 2021

சாட்டை' துரைமுருகன் கைது; அரசியல் காழ்ப்புணர்ச்சி - பழிவாங்கும் போக்கு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

ntk-condemns-dmk-government

.hindutamil.in/  : 'சாட்டை' துரைமுருகனைக் கைது செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.


மேலும், விடுதலைப் புலிகள் குறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், காங்கிரஸ் கட்சி குறித்தும், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது திமுகவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருநெல்வேலி அருகே சாட்டை துரைமுருகன் இன்று (அக். 11) அதிகாலையில் கைது செய்யப்பட்டு, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 25 ஆம் தேதி வரை சாட்டை துரைமுருகனைச் சிறையில் அடைக்க பத்மநாபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி இன்று (அக். 11) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வதைக் கண்டித்து, நேற்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக, ஊடகவியலாளர் 'சாட்டை' துரைமுருகனைக் கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றம் சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.

'சாட்டை' துரைமுருகனைத் தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத் தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: