ஞாயிறு, 10 அக்டோபர், 2021

லக்னோ மும்பை ஓடும் ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு.. தடுக்க முயன்றவர்களுக்கு வெட்டு... கொள்ளையர்கள் அட்டூழியம்

 Vignesh Selvaraj  - கலைஞர் செய்திகள்  :     ஓடும் ரயிலில் கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் நாள்தோறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறி வருவது பெண்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.
மும்பை நோக்கிச் சென்ற ரயிலில், எட்டு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நான்கு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது லகத்புரி நகருக்கு அருகே ஏ.சி பெட்டியில் ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஏறியது.


கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள், ரயிலில் பயணித்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்ததுடன், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

மேலும் தடுக்க வந்தவர்களை கத்தியால் வெட்டியுள்ளனர். கொள்ளையர்கள் வெட்டியதில் பயணிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த ரயில் கசரா ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.

இதனைக் கேட்டு அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கொள்ளை கும்பலைச் சேர்ந்த நால்வரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 4 பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்பு போலிஸார் மீட்டனர். ஓடும் ரயிலில் 8 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: