செவ்வாய், 1 ஜூன், 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார் . பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்கிறார்

/tamil.indianexpress.com : முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்திக்க டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்
அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மே 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றங்களில் அதிரடியான மாற்றங்களை செய்தார். அதிகாரிகள் நியமனங்களில் ஸ்டாலின் நடவடிக்கைகளை பல தரப்பினரும் பாராட்டவே செய்திருக்கிறார்கள்.தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் இணக்கமாகவே இருந்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தது. இப்போது மாநிலத்தில் திமுக ஆளும் கட்சியாக மாறியிருக்கிறது. அதனால், பாஜக மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தபடியே, திமுக அமைச்சர்கள், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி வரிகள் குறித்து விமர்சனம் என தொடர்கிறார்கள். இந்த சூழலில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். ஸ்டாலின் டெல்லி செல்வதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வருகையைப் பற்றி மத்திய அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும் தயார் நிலையில் உள்ளது. டெல்லி செல்லும் ஸ்டாலின், அங்கே 2 நாட்கள் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கொள்கை ரீதியாக மத்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மாநில முதல்வர் என்ற முறையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சார்பில் சில கோரிக்கைகளையும் முன் வைப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: