திங்கள், 31 மே, 2021

பத்மா சேஷாத்திரி ராஜகோபாலனின் லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்த போலீஸ்

 எஸ்.மகேஷ் - விகடன் : சென்னையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போனிலிருந்து அழிக்கப்பட்டமெஸேஜ்களை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் சைபர் க்ரைம் போலீஸார் மீட்டிருக்கின்றனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம ஷேசாத்ரி பால பவன் என்ற தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ராஜகோபாலன்.
59 வயதான இவர், நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்தப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வணிகவியல் தொடர்பான பாடங்களை கற்றுக்கொடுத்து வந்த ராஜகோபாலன் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகார்மனு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பள்ளியின் மேலும் சில மாணவிகள் ராஜகோபலனால் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை பகிர்ந்தனர்.இந்தக் குற்றச்சாட்டுகள் வைரலான பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். பிறகு ஆசிரியர் ராஜகோபாலனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்து போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை போலீஸார் நாடினர். சைபர் க்ரைம் போலீஸார், ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப்பில் அழிக்கப்பட்ட மெஸேஜ்களை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் மீட்டு அசோக் நகர் போலீஸாருக்கு அந்தத் தகவல்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள், அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகார், ஆதாரங்கள் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். தற்போது அழிக்கப்பட்ட தகவல்கள் கிடைத்திருப்பதால் அதன்அடிப்படையில் அசோக்நகர் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். இதற்கிடையில் ராஜகோபாலன் வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செல்போன், லேப்டாப்பில் என்னென்ன தகவல்கள் இருந்தன என போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “இந்த வழக்கில் எந்தத் தகவல்களையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஏனென்றால் அது விசாரணையைப் பாதிக்கும். குறிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியில் தெரியக்கூடாது.

ஆன்லைன் வகுப்பிலும், பள்ளியிலும் ஆசிரியர் ராஜகோபாலன் எல்லோரிடமும் சகஜமாக பழகிவந்திருக்கிறார். வாட்ஸ்அப்பில் மாணவிகளின் செல்போன் நம்பர்களுக்கு மெஸேஜ்களை அனுப்பி சேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டிவந்திருக்கிறார். ஆரம்பத்தில் பாடம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்த ராஜகோபாலன், ஒரு சில மாணவிகளிடம் பாடத்தை தவிர்த்து அவர்களின் அழகை வர்ணித்து ஆபாசமாக மெஸேஜ்களை செய்ய தொடங்கியிருக்கிறார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மாணவிகளிடம் மணிக்கணக்கில் சேட்டிங் செய்து வந்திருக்கிறார். பாடம் தொடர்பாக ஆன்லைனில் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் கருதி வந்திருக்கின்றனர். செல்போன், லேப்டாப் என பிஸியாகவே அவர் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் இருந்து வந்திருக்கிறார். சாதாரண போன் கால் செய்தால் ரெக்கார்டு செய்துவிடுவார்கள் எனக்கருதிய ராஜகோபாலன், இரவு நேரங்களில் மாணவிகளிடம் வாட்ஸ்அப் காலில் பேசி வந்திருக்கிறார். அப்போதும் அவர் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார். அதனால் அவரின் வாட்ஸ்அப் பல மணி நேரம் ஆன்லைனிலேயே இருந்திருக்கிறது.

இரட்டை அர்த்தங்கள் கொண்ட படங்கள், எஸ்.எம்.எஸ்களை மாணவிகளுக்கு அதிகளவில் ராஜகோபாலன் அனுப்பி வைத்திருக்கிறார். அதை புரிந்து கொள்ளத் தெரியாத சில மாணவிகள் தொடர்ந்து பேசும் போது, அடுத்தப்படியாக வீட்டுக்குத் தெரியாமல் சினிமாவுக்கு போகலாமா, வெளியில் செல்லலாமா என மெஸேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார்.

அதற்கு க்ரீன் சிக்னல் காட்டிய மாணவிகளுடன் வெளியிலும் சென்று வந்திருக்கிறார். ஒரு மாணவியின் அழகை வர்ணித்த ராஜகோபாலன், `நீ இந்தச் சேலையில் அழகாக இருக்கிறாய். ஆனால் சேலை அணியாமல் இருந்தால் இதைவிட அழகாக இருப்பாய் என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்’. இன்னும் சில மெஸேஜ்கள் அச்சில் ஏற்றமுடியாதளவுக்கு உள்ளது. இதுபோன்ற மெஸேஜ்கள் யாருக்கெல்லாம் ராஜகோபாலன் அனுப்பியிருக்கிறார் என்ற விவரத்தை சேகரித்திருக்கிறோம்.

துணை கமிஷ்னர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் குறித்து தகவல் அளித்திருக்கும் பலர், அவர் மிரட்டி, கட்டாயப்படுத்தி தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் அவரும் தங்களுக்கு தனிப்பட்ட படங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றனர். அது தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதற்கிடையில் அவர் லேப்டாப்பிலும் செல்போனிலும் என்னென்ன இணையதளங்களை பார்வையிட்டார் என்ற விவரங்களும் கிடைத்திருக்கிறது” என்றனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் அளித்திருக்கும் தகவலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு போலீஸார் தயாராகி விட்டனர். இதற்கிடையில் சென்னையில் உள்ள தனியார், அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்து சமூகவலைதளங்களில் மேலும் பல பெண்கள் தகவல்களை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றனர்
விகடன்.com

கருத்துகள் இல்லை: