சனி, 5 ஜூன், 2021

பேஸ்புக் - அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் Facebook

 தினத்தந்தி :அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் பேஸ்புக்
அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் பேஸ்புக்
அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
நியூயார்க்,  உலகின் பிரபலமான சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று பேஸ்புக். உலகம் முழுவதும் பல கோடி பேர் பேஸ்புக் பயனாளர்களாக இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்கை பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு விதிவிலக்குகளை வழங்கியுள்ளது.
அதன்படி அரசியல்வாதிகள் பேஸ்புக்கில் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் வன்முறை மற்றும் சர்ச்சைக்குறியதாக இருந்தாலும் கூட இயல்பாகவே அது ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையாதாக கருதப்படுகிறது. இந்த கொள்கையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கடந்த 2016-ல் கொண்டு வந்தார்.இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் பேஸ்புக் கணக்கு காலவரையின்றி முடக்கப்பட்ட நிலையில், அவரது கணக்கை என்ன செய்வது என்பது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு விதிவிலக்கு வழங்கும் மார்க் ஜூகர்பெர்க்கின் சர்ச்சைக்குரிய கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் பலவும் இதுகுறித்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில் பேஸ்புக் நிறுவனம் இதுபற்றி உடனடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை: