வியாழன், 3 ஜூன், 2021

மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 தினத்தந்தி : மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பிளஸ்-2 தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக, நான் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து பிரதமர் அறிவித்தார். பிளஸ்-2 மதிப்பெண்ணை எப்படி மதிப்பிடுவோம் என்பது பற்றியும் கூறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதையும் மீறி, தேர்வு எழுத விரும்பினால் அவர்களுக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இதில் ஒரு தெளிவில்லாத நிலை காணப்படுகிறது.

எனவே இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள், கல்வியாளர்கள், டாக்டர்களின் கருத்தையும் கேட்டு தமிழக அரசு முடிவு எடுக்கும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை 2 நாட்கள் (நேற்றும், இன்றும்) கேட்டறிந்த பின்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துகளை பதிவு செய்யும் மின்னஞ்சல் முகவரியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம். 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

பிளஸ்-2 மதிப்பெண் என்பது மிகமிக முக்கியமாக உள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் உடல்நலனும் முக்கியம்.

தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மட்டுமல்லாமல், ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கும் செல்ல நம் மாணவர்கள் முயற்சி செய்வார்கள். மாநில பாடத்திட்டத்தில் வரும் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதுபோல் நீட் தேர்வையும் ஏன் ரத்து செய்யக்கூடாது? நுழைவுத்தேர்வை மறைமுகமாக கொண்டு வரப்போகிறீர்களா? என்ற கேள்விகளையும் சிலர் கேட்கின்றனர். ஆனால் அனைத்து தரப்பு கருத்துகளையும் மதிப்பிட்டு முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: