புதன், 2 ஜூன், 2021

வன்னியர் 10.5% ஒதுக்கீட்டில் சிக்கலா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்வது என்ன?

வன்னியர் அதிமுக திமுக

ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : `வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. இதுதொடர்பாக அறவழியில் போராடவும் அவை ஆயத்தமாகி வருகின்றன. என்ன நடக்கிறது? கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்று (MBC-V) ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. `இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும்' எனவும் பேரவையில் அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தற்காலிகமா.. நிரந்தரமா?

அ.தி.மு.க அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் பேசும்போது, `இந்த உள்ஒதுக்கீடு தற்காலிகமானதுதான்' என்றனர். இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியைக் களைய முடியும் என நம்பினர். இதற்கு பதில் அளித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது. அது நிரந்தரமானது. இந்தச் சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர்' என விமர்சித்தார்.

மேலும், `சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என ஒன்று கிடையாது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வரப்படும் வரையில் நீடிக்கும்' என விளக்கமும் கொடுத்தார்.

3,500 காலி பணியிடங்கள்

இந்நிலையில், வன்னியர் உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்யும் பணிகளில் தி.மு.க அரசு ஈடுபடுவதாக வன்னிய சமூக அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

இதுதொடர்பாக, வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வன்னிய சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உயர்கல்வித்துறையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் இந்த அரசாணை எந்தவகையில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது தெரியவில்லை.

அதேநேரம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு இணையவழியில் விண்ணப்பங்களை பெற்று வருகின்றன. சுமார் 3,500 காலிப் பணியிடங்கள் இவற்றில் வருகின்றன.

வன்னியர் அதிமுக திமுக

பட மூலாதாரம், TWITTER

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், `வன்னிய உள்ஒதுக்கீடு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதனை பரிசீலிக்க முடியாது' எனக் கூறியுள்ளார்.

அதேபோல், கொரோனா பேரிடர் நேரத்தில் மருத்துவத்துறையில் நடைபெறும் நியமனங்களிலும் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

உயர்கல்வித்துறைக்கு அரசாணை வெளியிட்டதுபோல, மற்ற துறைகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை. தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் நேர்முகத் தேர்வை ஒத்தி வைத்துள்ளனர். இதிலும் உள்ஒதுக்கீட்டை அரசு பரிசீலிக்கவில்லை. அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதையே உணர முடிகிறது" என்கிறார்.

காலம் தாழ்த்தும் எண்ணமா?

தொடர்ந்து பேசுகையில், `` வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் 5 பேர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க அரசு அக்கறை செலுத்தவில்லை.

தேர்தல் பரப்புரையின்போதும், `வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததை ஓ.பி.எஸ் கண்டுகொள்ளவில்லை' என தென்தமிழகத்தில் தி.மு.க நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், புதிய அரசு இதனை நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகமும் உள்ளது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைத்திருந்தால் இந்தச் சட்டம் நடைமுறையில் சாத்தியமாகியிருக்கும்.

தற்போதுள்ள அரசு இந்த உள்ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். அது தற்போது சாத்தியமில்லை என்பதால் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சிலர் இடையூறு செய்ய நினைக்கிறார்கள்.

இதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் வேலைகளும் நடக்கின்றன. இந்த விவகாரத்தை முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவரும், `இந்த அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்த்துவிட்டு முடிவு செய்வோம்' எனக் கூறியுள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலின்போது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ஒதுக்கீடு தருவோம்' என ஸ்டாலின் கூறினார். ஆனால், இதனை செயல்படுத்துவதற்கு தயக்கம் காட்டுவதாகவே பார்க்கிறோம். இதுதொடர்பாக, விரைவில் 40 வன்னிய சங்கங்கள் இணைந்து அகிம்சை வழியில் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்கிறார்.

கருத்துகள் இல்லை: