செவ்வாய், 18 மே, 2021

திருப்பதி கோயில் ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்..குவியல் குவியலாக நாணயங்கள்

 Jeyalakshmi C  -  tamil.oneindia.com  :  திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும் 25 கிலோ நாணயங்களும் விஜிலென்ஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் வாகனத்தில் எடுத்துச்சென்று திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் சேர்த்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சீனிவாச்சாரி. கோயில் ஊழியர் என்ற அடிப்படையில் இவர், தங்கிக்கொள்ள திருப்பதி சேஷாசலம் நகரில் தேவஸ்தானம் சார்பில் இவருக்கு வீடு வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டாலும் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.



60 வயதான சீனிவாச்சாரி கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டார். ஓராண்டுகளாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. சீனிவாச்சாரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தேவஸ்தானம் வழங்கிய அந்த வீட்டை மீண்டும் கையகப்படுத்த முடிவு செய்தது. இதையொட்டி நேற்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சீனிவாச்சாரி வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு சில மூட்டைகள் கிடந்தன. அதில் ஒரு மூட்டையில் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டியை திறந்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மூட்டைகளை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தபோது பணமும் நாணயங்களும் இருந்தன. பணம் எண்ணும் இயந்திரத்தைக் கொண்டு வந்து எண்ணியபோது சுமார் ரூ.6. 15 லட்சம் பணமும் 25 கிலோ தங்க நாணயங்களும் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே தேவஸ்தான உயரதிகாரிகளுக்கு விஜிலென்ஸ் அதிகரிகள் தகவல் தெரிவித்தனர். அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் வாகனத்தில் எடுத்துச்சென்று திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் சேர்த்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலை செய்ய முன்னாள் ஊழியரின் வீட்டில் பணமும் நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தேவஸ்தான அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: