வியாழன், 20 மே, 2021

அயோத்திதாசர் பெரியாருக்கு நேரெதிர் திசையில் பயணித்தார்? .. பார்ப்பனீயம் பௌத்தம் ......

KRS | கரச on Twitter: "அயோத்திதாசர் பற்றிய பெரியார் உரை, 1961 Kolar " அயோத்திதாச பண்டிதர் அய்யாவின் அறிவு விளக்க நூல்களை, நாங்கள் எப்படிக்  குறைந்த ...

நிலவினியன் மாணிக்கம்  :  அயோத்தி தாசர் பெரியாருக்கு முன்னோடியா?
அயோத்திதாசப் பண்டிதரைப் பெரியாருக்கான முன்னோடி என்று மூன்று விஷயங்களில் சொல்கின்றனர்..
ஒன்று, பார்ப்பன எதிர்ப்பை அயோத்திதாசர் முன்வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி.
 இன்னொன்று திராவிடம் என்கின்ற அடையாள அரசியலை முன் வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி.
மூன்றாவது பெளத்தத்தை சமத்துவத்திற்கான மதமாக சாதகமாக அணுகுவது என்பதில் பெரியாருக்கு முன்னோடி அப்படின்னு
ஆனால் மூன்றிலும் அயோத்தி தாசர்  பெரியாருடன் நூறு சதவீதம் எதிர் திசையில் பயணிக்கிறார் என்பதே உண்மை
அயோத்திதாசப் பண்டிதர் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தால்கூட அதை எந்த அடிப்படையில் முன்வைக்கிறார் என்று சொன்னால், எதார்த்த பிராமணன், வேஷபிராமணன் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார்.
பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் உண்மையான பிராமணர்கள் கிடையாது. நாங்கள் தான் உண்மையான பிராமணர்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார். ஆனால் பெரியாருடைய பார்ப்பன எதிர்ப்பு என்பது முற்றிலும் வேறுபட்டது.


நீதிக்கட்சி பெரியார் தலைமையில் வந்தபிறகு, இயக்கத்துக்கு என்ன பெயர் வைப்பது என்கின்ற விவாதம் வருகின்ற போது, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று வைக்கலாம், ‘பார்ப்பனரல்லாதார் கழகம்’ என்று வைக்கலாமா? என்று விவாதம் வருகின்ற போது பார்ப்பனர்களை முன்னிலைப் படுத்தி நம்மை ஏன் ‘அல்லாதோர்’ என்று சொல்ல வேண்டும். நம்ம திராவிடர்கள். ‘திராவிடர் கழகம்’ என்று வைப்போம் என்று சொல்கிறார் பெரியார்.

பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி ஒரு இயக்கத்திற்குப் பெயரே வைக்கக் கூடாது என்பது பெரியாரின் நிலைப்பாடு. ஆனால் அயோத்திதாசப் பண்டிதரின் நிலைப் பாடு என்பது பார்ப்பனர்களுடைய அடையாளத்தை அடிப்படையாக வைத்துத்தான், வேஷ பிராமணனா, எதார்த்த பிராமணனா, என்கிறார்.
இரண்டாவது ‘திராவிடம்’ என்கின்ற அடையாளத்தை அயோத்தி தாசர் பறையர் களுக்கு மட்டும் முன்வைக்கின்றார். ஆனால் பெரியாரோ அதை ஒட்டுமொத்தப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் என்று ஒரு விரிந்த தளத்தில் வைக்கின்றார்.

மூன்றாவது பெளத்தம் என்ற விஷயத்தை எடுத்தோமென்றால் அயோத்தி தாசருடைய பெளத்தத்தை பெரியார் ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அயோத்தி தாசருடைய பெளத்தம் என்பதை அம்பேத்கர் போன்றோர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

தோழர் ஸ்டாலின் ராஜாங்கம் சிங்கார வேலருக்கும் அயோத்திதாசருக்கும் நடந்த ஒரு விவாதத்தை சிறு வெளியிடாக கொண்டு வந்துள்ளார். சிங்காரவேலர், லட்சுமிநரசு போன்றோர்கள் எல்லாம் இருந்தது “மகாபோதி சங்கம்”. அயோத்திதாசர் நடத்தியது “சாக்கிய பெளத்த சங்கம்”. இரண்டு சங்கங்களுக்குமிடையே ஒரு பெரிய விவாதம் போகிறது. அந்த விவாதத்தில் ஒரு அடிப்படையான விஷயத்தில் ரெண்டு பேருமே கருத்து முரண்படுகிறார்கள். என்னவென்றால், “பெளத்தத்தில் மறுபிறவி என்பது இருக்கா இல்லையா?” அப்படின்னு ஒரு விஷயம்.

அயோத்திதாசர் சொல்கிறார், “மறுபிறவி இருக்கிறது” என்கிறார். சிங்காரவேலர் , “மறுபிறவி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஆன்மா என்பதையே பெளத்தம் மறுக்கிறது. பெளத்தத்தில் கடவுளும் கிடையாது. ஆன்மாவும் கிடையாது. ஆன்மாவே கிடையாது என்கின்ற போது மறுபிறவி என்பது எப்படி இருக்கும்” என்பது சிங்காரவேலருடைய கேள்வி.

அப்போது அயோத்திதாசர் என்ன சொல்கிறார் என்றால், “ஆன்மா என்பது உடம்பு தான். தனியாக ஒன்றும் கிடையாது. ஆனால் மறுபிறவி இருக்கு. மறுபிறவி இல்லை என்று நாம் சொல்லி விட்டால் குடிப்பதை தப்பு என்று சொல்ல முடியாது. அடுத்தவன் மனைவியை ஆசைப்படுவது தப்பு என்று சொல்ல முடியாது. எல்லா அயோக்கியத்தனங்களையும் தப்பு என்று சொல்லமுடியாது. அதனால் மறுபிறவி என்பது பெளத்தத்தில் இருக்கு” என்பது அயோத்திதாசப் பண்டிதருடைய கருத்து.
மறுபிறவி என்கின்ற கருத்தாக்கத்தைப் பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார். அம்பேத்கர் பெளத்தத்தை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் பார்த்தோ மானால் அம்பேத்கர் தனது கட்டுரையில் எழுதும்போது புத்தருக்கும் அவருடைய கடைசிச் சீடரான ஆனந்திற்கும் நடக்கும் ஒரு உரையாடல் நடக்கிறதாக அம்பேத்கர் எழுதுகிறபோது சொல்கிறார். “ஆன்மாவே இல்லை என்கின்ற போது எப்படி மறுபிறவி வருகின்றது?” என்கின்றபோது அவர் என்ன சொல்கிறார் என்றால்,

“மனிதன் இறந்தபிறகு அவனுடைய சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படுகிறது. அவனுக்குள் இருந்த காற்று மாதிரியான விஷயங்கள் பஞ்சபூதங்களில் கலந்துவிடுகிறது. இது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுவதுதான் மறுபிறவி என்று சொல்வோம்” என்கிறார்.
இங்கே தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெளத்த சிந்தனையாளராக இருந்தவர் அயோத்தி தாசர். சிங்காரவேலர் காலத்தில் செயல்பட்டவர்.
அம்பேத்கருடைய “புத்தமும் அவர் தம்மமும்” நூலின் முன்னுரையில் அம்பேத்கரால் குறிப்பிடப் பட்டவரான லட்சுமி நரசு என்ன சொல்கிறார் என்றால், “எவனொருவன் சிந்தனையும் பேச்சும் எல்லோருடைய மனதிலும் பதிந்து தொடர்ச்சி யாகப் பேசப்படுகிறதோ அதுதான் மறுபிறவி” என்கிறார்.
பெரியார் அவர்களுடைய சிந்தனையை, பேச்சைப் பேசிக் கொண்டிருக்கின்றோம், அம்பேத்கர் அவர்களுடைய சிந்தனையை, பேச்சைப் பேசிக் கொண்டிருக்கின்றோம்,     அயோத்திதாசருடைய சிந்தனைகளை நாம் பேசிக் கொண்டிருக்கோமானால் அதுதான் மறுபிறவி. என்பது இவர்களுடைய வாதம். அம்பேத்கர், லட்சுமி நரசு, சிங்காரவேலர் இவர்களுடைய வாதம்.

ஆனால் அயோத்திதாசர் நேரடியாகவே மறுபிறவி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுகிறார். அம்பேத்கரின் பெளத்தத்திற்கும் அயோத்திதாசரின் பெளத்தத்திற்குமே நிறைய வித்யாசம் இருக்கிறது. அயோத்திதாசர் சமணமதமே கிடையாது. சமணம் என்பது பெளத்தத்தோட ஒரு பகுதிதான் என்று எழுதுகிறார். இதையெல்லாம் அம்பேத்கர் எந்தக் காலகட்டத்திலும் ஏற்றுக் கொண்டதே இல்லை. அவர் அயோத்திதாசரை எங்கேயுமே குறிப்பிடவில்லை. அம்பேத்கரோட பெளத்தத்திற்கும் அயோத்திதாசருடைய பெளத்தத்திற்குமே எந்தத் தொடர்பும் இல்லாத போது பெரியார் பெளத்தத்தைப் பேசியதற்கு அயோத்திதாசர்தான் முன்னோடி என்பதற்கும் அடிப்படை கிடையாது.

G Shanmugakani  :   வெறுப்படைவதைக் காட்டிலும், விவேகமாகச் சிந்திப்பது பயன்தரும். பிரபந்தங்களையும், திருமுறைகளையும், விவிலியப் பேருரையையும், நபிகள் வழிமுறையையும், சிரமண (பௌத்த, சமண) நூல்களையும், தமிழிலக்கியங்களையும், பிறவற்றையும் படித்துள்ளேன். வாருங்கள்; வாதிடுவோம் என்று முதன் முதலில் வாதத்திற்கு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவர் ஐயா அயோத்திதாசப் பண்டிதர்.
இந்திய தேசிய காங்கிரஸை கடுமையாக எதிர்த்தார் பண்டிதர். தேச பக்தி என்பதை   அயோத்தி தாசர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
தென்னாப்ரிக்காவில் இந்தியர்களை இன ஒதுக்கல் கொள்கை மூலம் ஒடுக்கி ஒதுக்கியதை,  இந்திய தேசிய அளவில் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் துவங்கிய காலத்தில் " எங்களை இங்கு ஒதுக்கி வைப்பதை விடவா தென்னாப்ரிக்கா இன ஒதுக்கல் மோசம்" என்றார் பண்டிதர்.
நெட்டால் தேசத்தில் அவலப்படும் குடிகளுக்காக பரிந்து பேசும் கனவான்கள் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்த தேசத்து பூர்வத் தமிழ்க்குடிகளை தாழ்த்திப் பாழாக்கிவரும் பரிதாபத்தை பத்திரிக்கை மூலமாகவும், நேரடியாகவும் கண்டுவரும் கனவான்கள்   இக்காங்கிரஸ் கூட்டத்தில் விளக்கி  அவர்களுக்கு ஒரு தீர்வு கண்டாரில்லை. இக் கூட்டத்திற்கு நேஷனல் காங்கிரஸ் எனும் பெயர் தகுமோ?  என்று கேள்வி எழுப்பினார் பண்டித அயோத்தி தாசர்.
திராவிடம் பற்றியும் பார்ப்பனீய எதிர்ப்பு பற்றியும் அறிய விரும்புவோர் முதலில் அயோத்தி தாசப் பண்டிதரைப் பற்றி படிப்பது நல்ல படிப்பினையைத் தரும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.
http://www.keetru.com/.../kaatt.../35901-2018-10-06-07-46-54

கருத்துகள் இல்லை: