வியாழன், 24 டிசம்பர், 2020

வைக்கம் போராட்டம்தான் தீண்டா மையையும் சாதிக் கொடுமையும் எதிர்த்து முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம்!

No photo description available.
  Chozha Rajan : · பெரியார் எடுத்த காரியம் தோற்றதில்லை! 1924 ஆம் ஆண்டு ராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதுவரை, திருச்சியில் இயங்கி வந்த காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்றினார். தனது இல்லத்தையே அலுவலகமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆண்டு மே மாதம் ராமசாமி நாயக்கருக்கு வைக்கம் நகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. பின்னர் ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த விஷயம் பின்னாளில் இந்தியாவையே திரும்பச் செய்த முக்கியமான விஷயம். அது என்ன?
திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஒரு சிறு நகரம் வைக்கம். ஈழவர்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்த நகரின் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூட முடியாது.
இதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழவ சமுதாயத் தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் கைதானார்கள். ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்தவே ஆளில்லை என்ற நிலை உருவானது.
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் இந்த போராட்டத்தை திறமையாக நடத்துவார் என்று முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் சேர்ந்து கையொப்பமிட்டு ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.
இந்தக் கடிதம் ஈரோட்டுக்கு வந்த நேரத்தில் நாயக்கர் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டி ருந்தார். அது அவர் கையில் கிடைக்கும்பொழுது பண்ணைப்புரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த நாயக்கர் தன் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்து விட்டு உடனே ஈரோட்டுக்குத் திரும்பினார். தான் திரும்பி வரும் வரையில் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டு ராஜாஜிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.
இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு வைக்கம் சென்றார். அங்கு திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து அவரை வரவேற்க ஆட்கள் வந்தார்கள். அதாவது, நாயக்கரை சமாதானப் படுத்த மகாராஜா முயற்சி செய்தார்.
நாயக்கர் முடிவெடுத்து விட்டால், அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். மகாராஜா பேச்சையா கேட்பார்.
வைக்கம் நகரில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சில நாட்கள் ஆவேசமாக பேசினார். அவர்கள் எழுச்சி அடைந்தார்கள்.
மகாராஜா ஒரு வாரம் பொறுத்திருந்தார். விஷயம் விபரீதமாகிப் போய்க் கொண்டிருந்தது. இதையடுத்து வைக்கம் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்தார். சட்டத்தை மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட நாயக்கரும், அவரது நண்பர்களும் சட்டத்தை மீறி பேசி கைதானார்கள். அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட நாகம்மாளும், கண்ணம்மாளும் வேறு சிலருடன் வைக்கத்திற்கு வந்து நாயக்கரின் பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர்.
நாயக்கருடைய போராட்டத்தை நிறுத்த ராஜாஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. காந்தி கூட இந்த போராட் டத்தை ஆதரிக்க முன்வரவில்லை.
நாயக்கர் சிறையிலிருந்து விடுதலையானதும் மீண்டும் அங்கேயே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். காந்தியின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு இல்லை என்பதைக் கண்ட அதிகாரிகள் நாயக்கரை மீண்டும் கைது செய்து 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்கள்.
ஆனால் சில நாட்களில் மகாராஜா மரணமடைந்தார். இதையடுத்து கைதானவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களோடு உடன் பாட்டுக்கு வர ராணி விருப்பம் தெரிவித்தார். நாயக்கருக் கும் ராணிக்கும் இடையே உடன்பாடு ஏற்பாடுவதை விரும்பாத சமஸ்தான திவான், ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அவர் காந்திக்கு கடிதம் எழுதி வைக்கத்திற்கு வரும்படி கோரினார்.
வைக்கம் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் தன் தாயாரைக் காண்பதற்காக ராமசாமி நாயக்கர் ஈரோடுக் குத் திரும்பி வந்தார். ஆனால் உடனே கைது செய்யப் பட்டார். அதற்கு என்ன காரணம்?
சுமார் 7 மாதங்களுக்கு முன் சென்னையில் அரசாங்கத் திற்கு எதிராகப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டி ருந்தது. நாயக்கர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுவும் ஒரு சதிதான். சென்னைக்கு கொண்டுபோய் விட்டால் வைக்கம் போராட்டத்தை தொடர முடியாதல் லவா?
ஆனால், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நாயக்கர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். கைது நடவடிக் கையை எதிர்த்து தான் வாதிடப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டார்.
ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும் என்பதால் மாகாண அரசாங்கமே அவரை விடுவித்து விட்டது.
ராஜாஜி எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டு காந்தி வைக்கம் வந்தார். அவருக்கும் திருவாங்கூர் ராணிக்கும் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது நாயக்கர் அதில் கலந்து கொள்ளவில்லை. பயணியர் விடுதியில் தங்கிக் கொண்டார்.
பேச்சுவார்த்தையில் ராணி ஒரு நிபந்தனை விதித்தார்.
“ரோடுகளைத் திறந்து விட நாங்கள் தயார். ஆனால் அதைச் செய்தவுடன் கோவிலுக்குள் நுழைய நாயக்கர் ரகளை செய்யக் கூடாது”
ராணி இப்படி சொன்னதும், காந்தி, நாயக்கர் தங்கியி ருந்த பயணியர் விடுதிக்கு வந்தார். ராணியின் கருத்தை தெரிவித்தார்.
“கோவில் நுழைவு என்பது காங்கிரஸின் லட்சியமாக இல்லாமல் இருக்கலாம். அது எனது லட்சியம். அதை நான் விட்டுத் தரமுடியாது. ஆனால், இப்போதைக்கு அதுபோன்ற கிளர்ச்சி எதுவும் இருக்காது. மக்களுக்கு புரியும்படி பிரச்சாரம் செய்த பிறகு கிளர்ச்சி தொடங்கப் படலாம்”
நாயக்கர் இப்படி சொன்னவுடன், காந்தி ராணியிடம் தெரிவித்தார். அதை ஏற்று வைக்கம் நகரில் கோவிலைச் சுற்றிய தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாட தடையில்லை என்று ராணி அறிவித்தார்.
இந்தப் போராட்டம் இந்தியாவிலும், தமிழகத்திலும் நாயக்கரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.
தனது போராட்டத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை வைக்கம் நகரில் தங்கியிருந்த நாயக்கர் ஈரோடு திரும்பி னார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியை திரு.வி.க. வழங்கினார். அது நிலைத்தும் விட்டது.
சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் பேசும் பொழுது நாயக்கர் பின்வருமாறு பேசினார்.
“அறப் போராட்டத்தின் நோக்கம் நாய்களும், பன்றிகளும் நடக்கும் தெருவில் நாமும் நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதுதான்.”
வைக்கம் போராட்டம்தான் இந்தியாவிலேயே தீண்டா மையையும் சாதிக் கொடுமையும் எதிர்த்து முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம் என்று வரலாறு பதிவு செய்துகொண்டது

கருத்துகள் இல்லை: