வெள்ளி, 25 டிசம்பர், 2020

கலைப்புலி தாணுவும் வைகோவும் .. இதுவும் ஒரு பழைய அரசியல் டைரி குறிப்புத்தான்

Raja Rajendran :
· தாணு தொடர்கிறார். வைகோவின் அன்பும், சாதுர்யங்களுமே தன்னைக் கலைஞரிடமிருந்து பிரிய வைத்துவிட்டது என வருந்தி எழுதுகிறார் ! வைகோ இன்று திமுகவுடன் நெருக்கமாக இருப்பதால் அவரால் மனம் திறந்து பேச முடியவில்லை என்பது ஒவ்வொரு பத்தியிலும் தெரிகிறது ! 1993 -ல் பத்து லட்சம் கடனை வைகோ சொல்லி தாணு கொடுத்து, அது வராது என்கிற நிலையில், தானே தந்துவிடுவதாக வைகோ உறுதி கூறி, இன்றுவரை அது வரவில்லை என்கிறார் ! எம் ஆர் சி நகரில் தான் வாங்கிய புதுவீட்டை இரண்டு மாதங்கள் பயன்படுத்திவிட்டு திரும்பத் தருகிறேன் என்றுவிட்டு, ஐந்து வருடங்கள் ஓசியில் (ஓசி என்பது என் செருகல் ;)) வசித்தார் என்கிறார் !
இப்படியெல்லாம் எதையெதையோ கொட்ட நினைப்பவருக்கு என்னமோ தடுக்கிறது. தொடரும் போடுவதற்கு மேலே வைகோ தனக்கு செய்த உதவிகளை வரும் வாரம் சொல்கிறேன் என்று முடிக்கிறார். இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து எழுதியிருக்கலாம் தாணு சார் 😉
போனவாரம் அழகிரி பற்றி ஏதோ சொல்லவிருந்தாரே என்று அதற்காகத்தான் உள்ளே போனேன். வைகோவுடன் தாணு இருந்த நெருக்கத்தை அழகிரி சந்தேகித்திருக்கிறார். அவ்வளவுதான். அதைத்தான் போன வாரமே பாத்துட்டமே ? எட்டப்பர் வகையறா பேர் போட்டு போஸ்டர் ஒட்டினா சந்தேகம் வரத்தானே செய்யும் ?
வழக்கம் போல தாணு பல நினைவுகள கிளறி விட்டுட்டார் !
வைகோ - கலைஞர் பூசல் புகைந்துக் கொண்டிருந்த பொழுதில், வீட்டருகே வைகோ கலந்துக் கொள்ளும் ஒரு திமுக பொதுக்கூட்டத்துக்கு பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன !
அப்பல்லாம் அவர் பெயர் கோபாலசாமிதான். அதுவரை கோபாலசாமி ஓர் எம் பி, டெல்லியில் நல்ல பார்லிமென்ட்ரியன், இங்க்லீஷ்ல நல்லா பேசுவார் என்பது வரை மட்டுமே பரிச்சயம். அவர் ரகசியமாய் விசா வாங்காமல் ஈழப்பயணம் செய்து பிரபாகரனைச் சந்தித்துவிட்டு வந்த பின்னரே, அவரைப் பற்றி தந்தி மிகவும் புகழ்ந்தெழுத ஆரம்பித்தது. கோபாலசாமி வை. கோபாலசாமி ஆகிறார். குறுகிய காலத்திற்குள் வைகோவாகவே மருவி விட்டது !
லாலா குண்டா தெருக்கள் மக்கள் அடர்த்தி கொண்டவை. குறுகலானவை. பார்த்தசாரதி தெரு கொஞ்சம் அகலமாக இருக்கும். கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்றோர் வந்தால் அங்கு மேடை போடுவார்கள். மேடை தொடங்கி பாண்டியன் தியேட்டரைத் தாண்டி டி எச் ரோடு வரை கூட்டம் நிற்கும் !
அதுவும் 1976 எம் ஜி ஆர் வந்தபின், அந்த ஏரியா இரட்டை இலைக்கு மாறிவிட்டது. முதன்முதலில் வென்றவர் ஐசரி வேலன். ஆனாலும் கலைஞருக்குத்தான் கூட்டம் அள்ளும்.
பேச்சைக் கேக்க மட்டும் கூட்டம் கூட்டமா வர்றீங்க, ஓட்டு போட மாட்றீங்களே ? என்பது கலைஞரின் பிரபல சொற்றொடர் !
திமுகவின் வைகோ வந்தபொழுது, அங்கே மேடை போடாமல், வலப்பக்கமாய் பாரத் தியேட்டரை பார்த்தபடி பிரம்மாண்ட மேடை. கலைஞருக்கு கூடுவது போல கூட்டம் பயங்கரமாய் கூடி நிற்கிறது !
அண்ணன் கோபலசாமி இதோ வந்துவிட்டார் என்றவுடன் கலைஞர் போன்ற தலைவர்கள் வரும்போது எழும் பேரோசை. தொண்டர்களின் உற்சாக குரல். வைகோ மீது சிலிர்ப்பு எழுகிறது !
ஸ்டாலின் மீது அன்று துக்ளக்குகள் சாமர்த்தியமாக திமுக வாரிசு பிம்பத்தை இன்று உ நிக்கு செய்திருப்பதைப் போல் செய்திருந்தனர். அதற்கேற்ப திமுகவினரும் கலைஞருக்கு அடுத்து திமுகவுக்குத் தலைவர் வைகோதான் என்று பலர் அன்று தங்களுக்குள் உறுதியாகப் பேசிக்கொண்டனர் !
சொற்பொழிவுத் திறன்தான் ஒரு தலைவனுக்குரிய முதல் தகுதி என அன்றைய கூட்டம் நம்பியதில் வியப்பென்ன இருக்கப் போகிறது ?
வைகோ பேசத் தொடங்கினார் !
உயிரினும் மேலான என் அண்ணன் கலைஞரின் உடன்பிறப்புகளே என்றதும் கலைஞரின் அந்த வரிக்காக காத்திருக்கும் கூட்டத்தின் கைதட்டல் ஓசை கூரையைப் பறக்கவிட்டது !
எனக்கும் என் ஒப்பற்ற தலைவனுக்கும் சண்டை மூட்டி விடுகிறார்கள். என்னைத் திமுகவிலிருந்து சில தீய சக்திகள் (வேற யார் ? ஸ்டீல் மங்கைதேன்) பிரிக்க எண்ணுகின்றன. ஒருபோதும் கலைஞர் எனும் உயிரை இந்த உடல் பிரியாது, அப்படி பிரிந்தால் நான் சவமாகிப் போவேன். கனவிலும் கலைஞருக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது......
அந்த மேடையில் என் தாத்தாவும் (அப்பாவின் சித்தப்பா) இருந்தார். அவர் தண்டையார் பேட்டை பகுதிச் செயலாளர் என்பதால் அந்த ஏரியாவில் காணப்படும் அனைத்து திமுக சுவரொட்டிகளிலும் அவருடையப் பெயர் தவறாமல் இடம்பெறும். பள்ளி விட்டு வரும்போதெல்லாம், பிரம்மாண்ட போஸ்டர்களில் அவர் பெயரைத் தேடிக் கண்டுபிடித்து, அது யார் தெரியுமா என நண்பர்களிடம் பீற்றிக் கொள்வது என் வாடிக்கை !
உணர்ச்சிப்பிழம்பாக வைகோ ஆற்றிய இந்த உரையினால் கலைஞரின் பக்தர்கள் பிணக்கு தீர்ந்தது என அன்று மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றனர். ஆனால் அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்தும் தலைகீழானது !
வைகோ திமுகவை விட்டு வெளியேறினார் அல்லது வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்காக தீ வைத்து தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் மட்டும் 100 பேர்களாவது இருப்பர். அவருடன் 15 க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் வெளியேறினர் !
எம் ஜி ஆர் வெளியேற்றத்தின் போது கூட இவ்வளவு பெரிய வீழ்ச்சியை கழகம் கண்டிருக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் திமுகவுக்காக இருந்தது அப்போது இரண்டு எம் எல் ஏக்கள் மட்டுமே ! ஒன்று பரிதி. மற்றொருவர் செல்வராசன். கலைஞரின் ராஜினாமாவுக்குப் பிறகு துறைமுகம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்றவர். அவரும் வைகோ வெளியேறியவுடன் தன்னை மதிமுக என அறிவித்தார். பரிதி மட்டுமே அன்று திமுகவுக்காக எஞ்சியவர் !
அதன்பின்னர்தான் இன்றைய தாணு கட்டுரையிலிருந்த வண்ணாரப்பேட்டை சுழல்மெத்தை மீட்டிங்கும், மெரினா மெஹா பேரணியும் நிகழ்ந்தது !
இவ்விரண்டையும் அவ்வளவு கலர்ஃபுல்லாக ஒளிமயமாக மாநாடு போல் நடத்திக்காட்டியவர் ஏழுமலை நாயக்கர். யெஸ். அவருக்காகத்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன். ஆனா அவர் பாட்டுக்கு க்ளைமேக்ஸ்ல வாராரு !
ஏழுமலை நாயக்கர் பள்ளத்து அரசர் என்பார்காள். காசி மேட்டில் பாக்ஸர் வடிவேலு. அயோத்திகுப்பத்தில் வீரமணி. எர்ணாவூரில் ராதாகிருஷ்ணன் & நாராயணன். ஜேப்பியார், மதுசூதனன் எல்லாம் கவுரவமாக கல்வித்தந்தை, ஹேண்ட்லூம் மினிஸ்டர் ஆனபின் இவர்கள்தான் சென்னையை கோலேச்சிக் கொண்டிருந்தனர். ஏழுமலை நாயக்கருக்குத்தான் தாணு வைகோ சொல்லி பத்து லட்சம் கடன் கொடுத்திருக்கிறார் !
அவரும் அந்தப் பணத்தில் மிக மிகப் பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் & பேரணியை நடத்திவிட்டார். அந்தப் பேரணியை லைவ்வாக பார்த்த என் ஆருயிர் நண்பன் வானளவு அதைப் புகழ்ந்தான். நாயக்கர் பின்னிட்டார்ல்ல ? த்தா திமுககாரன்களுக்கு அல்லு வுட்ருச்சி போ என்றான் !
நீ யார்ரா அப்ப ?
இல்ல மச்சான், என்ன இருந்தாலும் கலைஞர் தன் புள்ளைக்காக வைகோவ இப்டி தூக்கி அடிச்சிருந்திருக்கக் கூடாது !
வைகோ அதன்பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தன் பலத்தைக் காட்ட கிளம்பிவிட, சென்னை பேரணி முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவ்வளவு பலம் வாய்ந்த தாதாவான ஏழுமலை நாயக்கரை அவர் ஏரியாவுக்குள்ளேயே புகுந்து கண்டம் துண்டமாகப் போட்டார்கள் !
வேனில் வந்திறங்கிய அவருக்குப் பரிச்சயமான ஒரு கூட்டம், வெற்றிகரமாக பேரணி & கூட்டத்தை நடத்தியதற்காக மாலையும், பொன்னாடையும் போர்த்துவதாக போர்த்தி - போட்டன !
1991 -ல் எப்படி ராஜிவ் கொலைக்கு கலைஞர் அல்லது திமுகதான் காரணம் என்றார்களோ, 1994 -ல் நாயக்கர் கொலைக்கும் ஸ்டாலினும், மதிவாணனுமே காரணம் என்றார்கள் !
மதிவாணன் ராயபுரத்தின் முன்னாள் எம் எல் ஏ. அந்த மனிதர் இன்றளவும் சைக்கிளில் கூட எவருடையத் துணையுமின்றி உலவுபவர். அவரைக் கூட சந்தேகத்திற்காக கைது செய்தது ஜெயா அரசு !
வைகோ பகிரங்கமாக கலைஞர் மீதே குற்றம் சாட்டினார் !
கேட் ராஜேந்திரன்தான் தொழில் போட்டியில் ஏழுமலை நாயக்கரைப் போட்டார் என்று பின்பு சொன்னார்கள் !
ஆனால் இதன் வால் பெரியது. சொரூப்சந்திரன், ஸ்பிக் முத்தைய்யா, எம் ஏ எம் ராமசாமி வரை கதை நீண்டதால், திடுக்கென்று வைகோ நாயக்கரை மறந்தார். துறைமுக கண்டெய்னர் லாரி மாமூல் மேட்டரில் நாயக்கர் மாமூல் தொகையை உயர்த்திக் கேட்கவே, அவருடைய போட்டியாளரை வைத்துப் போடுவது போல் பழி தீர்த்துக் கொண்டார்கள் !
தாணுவுடைய பத்துலட்சம் அத்தோடு போச்.
மச்சான் எப்பவுமே நாயக்கர் தோள்ல துண்டு போடுவார்ரா. ங்கோத்தா அன்னிக்குப் பார்த்து துண்டில்லாம இருந்துட்டாரு. ம்மாள துண்டு காண்டி இருந்தது, வூடு கட்டிருப்பாரு !
எப்படி மச்சி ?
எப்படியா ? அவரு யாருன்னு நினச்ச ? பாக்ஸர் மச்சி. பெட் ஃபைட் நிறைய பண்ணிருக்காரு. துண்ட வச்சி பொருளால போட்டா எப்படி தடுக்கறதுன்னு வித்த தெரிஞ்சவர்டா. நம்ப வச்சி கழுத்தறுத்தானுக. உங்காள்தானாமே ?
யார் மச்சி, கலைஞரையா சொல்ற ?
நாராயணன்னுதான் சொல்றாங்க.
ச்ச்சே அவரில்லையாம், அப்பா சொன்னாரு. என் அப்பா அப்ப நாராயணன் நிறுவனத்தில் நம்பிக்கையான ஓர் ஆளாய் இருந்தார் !
ஆனா ஒண்ணு மச்சி, நாயக்கர போட்டவங்கள போடாம வுட மாட்டேன்னு சிவா அண்ணன் சமாதில வச்சு சத்தியம் செஞ்சிருக்காரு, மவனே சிதைக்காம விட மாட்டாரு.
அதுக்கு ஏன்டா என்னமோ நான் போட்ட மாதிரி இவ்ளோவ் காண்டாவுற ?
இல்ல மச்சான், நல்ல மனுஷன் ப்ச்.
அப்புறம் பார்த்தா நாயக்கர் இடத்தை சிவாதான் கைப்பற்றினார். நாயக்கருக்கு பரிச்சயமான ஆளுகதான் வெட்டினாகன்னா அது ஏன் சிவாவே ..... அப்படில்லாம் ஒரு சந்தேகம் கூட வந்தது. ஆனா அதே சிவாவ நாராயணன் தம்பி சின்னதுரை போட்டார். அவங்க ஸ்கெட்ச் அபரிமிதமா இருக்கும். ஏரல் ஆட்கள். கேட்டா ஐ ஓ சி பிரிட்ஜ்கிட்ட வச்சு நாராயணன கையெறி குண்டெல்லாம் வீசி சிவா போட முயற்சித்ததாகவும், அதுக்குப் பழிவாங்க நாராயணன் சிவாவைப் போட்டதாகவும் முடிச்சி போட்டாங்க !
ஆனா சிம்பிள் டீல். இதுவும் அதே மாமூல் பிரச்சினை. வழக்கம்போல ஸ்பிக் முத்தைய்யா, எம் ஏ எம் ராமசாமி, ப்ளா ப்ளா.
ம நீ ம சார்பா நின்ன மவுரியா ஐ பி எஸ்தான் அப்ப இங்கிட்டு ஏசி. அவர்தான் நாராயணனை என்கவுண்டர் வரைக்கும் பயம் காட்டி அம்மா பக்கமா தள்ளிவிட்டாரும்பாய்ங்க. அவரும் சரத்குமாரோடச் சேர்ந்து அதுக்கப்புறமா எம் எல் ஏவாகவும் ஆகிட்டாரு. இப்பல்லாம் ஸ்டாலினோட வலப்பக்கம் நிக்கற அளவுக்கு வளர்ந்துட்டாரு. செம செம பணம் !
இங்க ரெண்டு மூணு ட்விஸ்ட்.
1.) வைகோ வெளியேறியபோது அவருடன் வெளியேறிய பலருக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் பெரும்பாலோர் தெலுகர்கள். நாயக்கர் & நாயுடு போன்ற ஆதிக்கச் சாதி ஆட்கள் !
2.) ஆமாம், என் நண்பன் அதி தீவிர கலைஞரிஸ்டாக இருந்தாலும் அன்று அவன் தடம் புரண்டதற்கு இந்தத் தெலுகுப் பாசமே காரணம். வைகோ ஜெயாவுடன் கூட்டணி வைத்த அடுத்த விநாடி துப்பிவிட்டு திருந்தினான். வைகோவின் பலமே பலவீனமுமானது. இது மத / இன அடிப்படையிலான அனைவருக்குமான நற்சான்று !
3.) வைகோ வெளியேறியவுடன் என் தாத்தா வீட்டுக்கு தந்தையுடன் போயிருந்தேன்.
என்ன சித்தப்பா நீங்க பேரணிக்குப் போகலையா ?
போடா கிறுக்கா. சாகிறவரைக்கும் கலைஞர்தான்டா என் தலைவர்.
என்னத்த தலைவர் ? இவ்வளவு உழைக்கிறீங்க ?
உங்களுக்கு கொடுக்க வேண்டிய சீட்ட சற்குணத்துக்கு கொடுக்கிறாங்க !
ஆமாண்டா, அவளே வீடு தேடி வந்து அண்ணாச்சி அண்ணாச்சின்னு கெஞ்சுறா. கலைஞரா பாத்து செய்வார்டா.
அதற்கப்புறம் சென்னை மாநகராட்சியில் அவர் கவுன்சிலர் ஆனார். மேலே செல்ல இயலவில்லை. ஒதுங்கிக்கொண்டார். போன வருடம் பிரியாணியை ஒரு பிடி பிடித்து நன்கு உறங்கிக் கொண்டே இறந்தும் போனார் !
முன்னாள் பகுதிச் செயலாளர். முன்னாள் கவுன்சிலர். அவ்வளவுதான். நீண்ட நாட்களாக கட்சியில் எந்தப் பணியிலுமில்லை. அவரைப் பற்றி நினைக்க அவர் தலைவருமில்லை. ஆனாலும் அவர் இறந்த சேதி கேட்டதும் ஸ்டாலின் அவர் உடலுக்கு மரியாதை செலுத்த ஓடோடி வந்தார். ஆறுதல் கூறினார். மாதவரம் சுதர்சன் எம் எல் ஏ தலைமையில் ஒரு பெருங்கூட்டமாய் உ பிக்கள் பல கிமீ நடந்தே சுடுகாடு வந்தனர். அங்கு கூடி ஓர் இறுதிஉரை நிகழ்த்தி மவுன அஞ்சலிக்குப் பின், சிதை எரியூட்டப்பட்டது !
எவர் என்ன தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வித்தை காட்டினாலும் திமுகவை அழிக்க முடியாமல் இருப்பதற்கான காரணிகள் இதுதான். அன்பால் அமைந்த அந்த அடித்தளம் மஹா இறுக்கமான ஒன்று. எத்தனை பூகம்பங்களையும் அது அனாயசமாகத் தாங்கும் !!!
-ராஜா ராஜேந்திரன்
சென்னை. 
No photo description available.

 
  No photo description available.

கருத்துகள் இல்லை: