புதன், 23 டிசம்பர், 2020

வனவாசத்தை முழுதும் படிக்காமல் தப்புப் தப்பாக வேண்டுமென்றே திரித்து வெளியிடுகிறார்கள்


  அ. வெற்றிவேல் : · வெறும் ஐந்து கவிதைகள் எழுதிய கண்ணதாசனை , அவரின் potential யை அறிந்து “ கவிஞர்” என்று அடைமொழியிட்டு பொள்ளாச்சி மேடையில் அறிமுகப்படுத்திய கலைஞரை - இடையில் 1965 ல் மனம் வருந்திப் போனாலும் பின்னாளில் - 1971 ல் மனம் திருந்திய மைந்தனாகி கவியரசராகித் திரும்பி வந்து தன் ஆத்ம நண்பனுக்கு பிறந்த நாள் விழா எடுத்து, அது சமயம் தன் நண்பனைக் குறித்து எழுதிய “ கலைஞரைப் பாராட்டுகிறார் கவிஞர்”என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் ”கலைஞருக்கு வயது கொஞ்சம் குறைவாக இருப்பதால் அகில இந்தியாவிலும் அவர் திறமை இன்னும் உணரப் படாமல் இருக்கலாம். ஆனால் இந்திய வரலாற்றில் அவர் ஒரு பகுதி என்பதைக் காலம் காட்டத்தான் போகிறது
பாதுஷா அக்பருக்குப் பிறகு பாரதம் இந்திராவையும் மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழகம் ஒரு கருணாநிதியையும் சந்திக்கின்றன
நான் யாரை யாரையெல்லாம் மதிக்கிறேனோ அவர்களுக்கு திருவிழா எடுப்பது என் மனதுக்குப் பிடித்த வேலை. அறிஞர் அண்ணா அவர்களின் ஐம்பதாம் ஆண்டின் நிறைவை நான் தான் உலகுக்குச் சொன்னேன். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நூறாவது ஆண்டு நிறைவை நான் தான் கொண்டாடினேன். புகழுடையோர் வரிசையில் கருணாநிதியும் ஒருவர் என்பதாலேயே அவருக்கு நான் பிறந்த நாள் விழாவை நடத்துகிறேன். நாளை நடைபெறும் கவியரங்கில் அவரை நான் என் நண்பராக மட்டும் பார்க்கவில்லை. என் காதலியாகவும் பார்க்கிறேன்
இருவருக்கும் நட்பு பகையாகி, ஆராதிக்கப்பட வேண்டிய அன்பு கசப்பாகி இரு துருவங்களாகப் பிரிந்தோம். நான் அரசியலைக் குழப்பிக் கொண்டு கலையிலும் இலக்கியத்திலும் முன்னேறினேன். கருணாநிதியோ மூன்று துறைகளிலும் ஒரே சீராக முன்னேறினார். அரசியலில் அவரிடம் தோற்றுப் போனேன் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. அவரைப் போல் அத்தனை காலச் சிறைவாசத்தையும் உழைப்பையும் நான் மேற்கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே அவருடைய வெற்றியை மதிக்க வேண்டியதும் என்னுடைய கடமையாகும்
கவிஞரின் வனவாசம் வெளியான ஆண்டு 1965. மேலே குறிப்பிட்ட புத்தகம் வெளியான ஆண்டு 1971. கலைஞர் எதிர்ப்பு என்பதால் மட்டுமே வனவாசம் அதிகம் வாசிக்கப்படுகிறது. அதற்கும் கவியரசரின் ஆன்மா கலைஞருக்கு தான் நன்றி சொல்லும் .
வனவாசத்தை முழுதும் படிக்காமல் தப்புப் தப்பாக வேண்டுமென்றே திரித்து வெளியிடுகிறார்கள் அதன் முன்னுரைகூடப் படிக்காத முண்டங்கள். “ நான் என்று எழுதுவதற்கு தகுதி போதாது என்ற தன்னடகத்துடனேயே “ அவன்” என்று என்னைக் குறிப்பிட்ட்டேன் என்று வனவாசம் முன்னுரையில் பாமரர்க்கும் பொருள்படும்படி எழுதி இருந்தும் , கவிஞர் திருட்டு ரயில் ஏறி வந்ததை கலைஞர் என்று திட்டமிட்டு பரப்ப 2000 ஆண்டு தேக்கி வைத்த வன்மத்தால் மட்டுமே முடியும்
கலைஞர் ஆதரவு என்றால் திட்டமிட்டு மறைக்கப்படும் . அதனை வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறையிடம் முறையாக நேர்மையாக கலைஞரை அறிமுகப்படுத்துகிற பணியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக “ கலைஞரைப் பாராட்டுகிறார் கவிஞர் “ என்ற நூலையும் பகிர்கிறேன்
வனவாசம் எழுதிய கவியரசர் மனந்திருந்திய நண்பனாக கலைஞரைப் பாராட்டி எழுதிய புத்தகம் உங்கள் பார்வைக்கு . எங்கெல்லாம் வனவாசம் என்று சொல்லி கலைஞர் மீது வன்மத்தை கக்குகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பூத்தூவல் அந்த வன்மத்தை மறைக்கட்டும்

கருத்துகள் இல்லை: