வெள்ளி, 25 டிசம்பர், 2020

ஹிந்து சமூகம் பாழானதற்கு பிராமணன்தான் காரணம்! காஞ்சி (old) பெரியவாள் சந்திர சேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (அப்பாடா)

Image may contain: 1 person, text that says '"ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்." -மகா பெரியவா சந்திரசேகரேந்திர சரசுவதி மிகள்(தெய்வத்தின் ல்-முதல் பகுதி)'

  Dhinakaran Chelliah : ·பிராம்மணீயம் “வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி. பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். 

அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”

“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துகொண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர்.”  
 
“முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும்?”
“துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து ‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (Physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை.”
 
“ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா? அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்துகொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்துக்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. 
 
இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும் என்றாகிவிட்டது. இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான்.”
 
“இப்போது ‘அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்?”
 
“ ‘தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம்’ என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ‘ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்’ என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.”
 
“ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்.”
“இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான்.”
“ ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’ என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.”
 
 
“கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—
 
கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா?அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.”
“முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள்? வெள்ளைக்காரனோடுதான் புது ஸயன்ஸ், யந்திர சாதனங்கள் வந்தன. மோட்டார்கார், எலெக்ரிஸிடி மாதிரி வெகு சுருக்கக் காரியத்தைச் செய்து கொள்வதற்கான சாதனங்கள் வந்தன. அதுவரை நினைத்தும் பார்த்திராத இத்தனை சௌகரியங்கள், சுக சாதனங்கள் வெள்ளைக்காரனோடு வந்ததால்தான் அவற்றின் கவர்ச்சியால் இவன் இழுக்கப்பட்டு அவர்களுக்குரிய வழிகளிலேயே மோகித்து விட்டான் என்கிறார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சமாதானமாகவோ நியாயமாகவோ ஆகாது.”
-மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் எழுதிய “தெய்வத்தின் குரல்” (முதல் பகுதி),பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? எனும் அத்யாயத்தில் ஒரு சில பகுதிகள்.
இதே போன்ற சில கருத்துக்களை என்னைப் போன்றவர்கள் பிராமணீயம் பற்றி எழுதினால் பிராம்மணர்களின் மீது ஏன் இத்தனை துவேஷம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.ஹிந்து சமூகம் பாழனதற்கு பிராம்மணர்களே காரணம் என்று எழுதிய பெரியவாள் சாதி வாரியாக தெருக்கள் உள்ளதை நியாயப் படுத்தத் தவறவில்லை.

கருத்துகள் இல்லை: