வெள்ளி, 30 அக்டோபர், 2020

வட்டிக்கு வட்டி தள்ளுபடி விவசாய கடன்களுக்குப் பொருந்தாது: மத்திய அரசு!

வட்டிக்கு வட்டி  தள்ளுபடி விவசாய கடன்களுக்குப் பொருந்தாது: மத்திய அரசு!

;minnampalam : வட்டி மீதான வட்டி தள்ளுபடி விவசாயம் சார்ந்த கடன்களுக்குப் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம், மக்களின் வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கான, கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது.   எனினும் இந்த ஆறுமாத கால கடன் தவணைகளுக்கு வட்டி மீதான வட்டி வசூலிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.     இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தது. 

இவ்வாறு தெரிவித்துவிட்டு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை மக்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசு கையில் தான் உள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், வட்டி மீதான வட்டி ரத்து தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்வழக்கு வரும் நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே மத்திய அரசு, 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் இந்த தீபாவளி சலுகையால், அரசின் கருவூலத்திற்கு 6,500 கோடி ரூபாய் வருவாய் குறையும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதி நிலவரப்படி சரிவர கணக்குகளைப் பராமரித்தவர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். இந்த தேதி நிலவரப்படி 2 கோடிக்கு மிகாமல் கடன் வாங்கியிருந்து, அதற்குத் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தியிருந்தால், நிலையான வட்டி மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதல் வட்டித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் நவம்பர் 5ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

எம்.எஸ்.எம்.இ கடன்கள், கல்வி கடன்கள், வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள், ஆட்டோமொபைல் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான தனிப்பட்ட கடன்கள் நுகர்வு கடன்கள் ஆகியவற்றுக்கு இந்த சலுகை பொருந்தும். ஆனால் விவசாயம் சார்ந்த கடன்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள், பயிர்க்கடன், டிராக்டர் கடன் ஆகியவற்றுக்கு இது பொருந்தாது. சொத்து பத்திரம் அல்லது தங்கத்தின் மீது பெறப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: