புதன், 28 அக்டோபர், 2020

சீனா இலங்கையின் நிலம். கடல்பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக ஒப்பந்தங்களை.. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ

thesamnet.co.uk :சீனா இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது”  என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.    தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர்,     இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது.

ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுகின்றது.

ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், எங்களுக்கும் அதே பார்வை இருக்கிறது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கை மக்கள் வெற்றி பெறுவதையும், இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அனுபவித்து, நிலையான வளர்ச்சியை அடைவதே அமெரிக்காவின் இலட்சியம் என்றும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

மைக் பொம்பியோவினை தொடர்ந்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: