சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நன்மாறன் அவர்கள் மதுரையிலிருந்து பேருந்தில் பயணம் செய்து திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். . நிகழ்ச்சி துவங்கும் நேரமாகி விட்டதாலும், நிகழ்ச்சி நடைபெறுமிடம் ஸ்டேட் வங்கியின் அருகில் என்பதாலும், பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் ஸ்டேட் வங்கி பக்கத்திலிருக்கும் நிறுத்தத்தில் அவரை இறங்கச் சொல்லியிருந்தோம்.
முகம் கழுவவும், இயற்கை உபாதையை சரிப்படுத்தவும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வசதி இல்லாததால் , அருகிலுள்ள நான் பணி செய்யும் வங்கிக்கு அவரை அழைத்துச் சென்றேன். இரவு நேரமாதலால் முன்புறம் பூட்டியிருந்தது. ஆயுதக்காவலரை அழைத்து திறக்கச் சொல்லி தோழரை உள்ளே அழைத்துச் சென்றேன் . ஒரு அதிகாரி மட்டும் பணியிலிருந்தார் .
வேட்டியை மடித்துக் கொண்டு முகம் கழுவ உள்ளே சென்று அவர் திரும்புவதற்குள் அந்த அதிகாரியும் காவலரும் வந்தவர் யாரென்று என்னிடம் வினவ "எனக்கு நெருக்கமானவர். இப்போது அவசரமாக ஒரு இடத்துக்குப் போவதால், நாளை விவரம் சொல்கிறேன் " என்று மட்டும் சொல்லி சமாளித்து அவரைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.
மறுநாள் அந்த இருவரிடமும் ," முந்திய தினம் என்னுடன் வந்தவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் "என்று சொன்னதை அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர் . பின்னர் ஆச்சரியப்பட்டு , " சொல்லாமல் இருந்துட்டீங்களே சார்..!! ஒரு காபி கூட வாங்கித் தராமல் சரியாக உபசரிக்காம இருந்திட்டோமே ...அவர் ஏதேனும் தப்பா நினைச்சிருப்பாரோ?" என்று வருத்தப்பட்டனர் .
காட்சிக்கு எப்போதுமே எளியவரான தோழர் நன்மாறன் வீட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் மறைவையொட்டி துக்கம் கேட்க நண்பர்களுடன் சென்றிருந்தேன்
. பல ஆண்டுகளாக, அந்த 184 சதுர அடியுள்ள சின்ன குச்சு வீட்டில் அவர் ஒருவரின் வருமானத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததை அன்று நேரடியாகப் பார்க்க நேரிட்டது
ஆரப்பாளையத்தின் நெருக்கடிமிகுந்த பகுதியில் ஒரு சந்துக்குள் தான் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நன்மாறனின் வீடு இருந்தது. அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்குள் நுழையவே மிகுந்த சிரமப்பட்டனர். .அவரது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் மூன்று பேர் மட்டுமே ஒரே நேரத்தில் நிற்க முடியும்
..பாட்டிகாலத்திலேயிருந்து வாடகைக்கு குடியிருந்து வந்த அந்த வீட்டை , வீட்டு உரிமையாளரின் வற்புறுத்தலின் பேரில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு வங்கியில் கடன்பெற்றும் ,நண்பர்களின் உதவியோடும் விலைக்கு வாங்கிக் குடியிருந்தார் . பொருளாதார சிக்கல் காரணமாக அண்மையில் அந்த வீட்டையும் விற்றுவிட்டு வாடகைக்கு வேறொரு வீட்டில் குடி போயுள்ளதாக தோழர் மதுரை பாலன் முக நூலில் பதிவு செய்திருந்ததைப் படித்து அதிர்ந்து போனேன் .
இக்காலத்தில் ஒரு வார்டுக் கவுன்சிலர்கூட தனது பதவிக்காலத்தில் பல வீடுகளுக்கு அதிபதியாகும் காட்சிகளை அன்றாட அரசியலில் பார்த்துவரும் ஒருவருக்கு , இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் வாடகைக்கு ஒரு குச்சு வீட்டில் குடியிருக்கும் மேடைக்கலைவாணர் நன்மாறனைப் பார்த்து அதிசயிக்கத்தான் தோன்றும்..!!
தனக்காக, தனது பிள்ளைகளுக்காக யாரிடமும் உதவி கோரியோ வேலை கேட்டு சிபாரிசுக்குப் போகாதவர்...!! எப்படியும் பொருளீட்டி எப்படியும் வாழலாம் என்று உலவும் அரசியல்வாதிகள் மத்தியில் , மேடையில் பேசும் வார்த்தைகளுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும் தோழர் நன்மாறன் இடதுசாரி இயக்கத்தின் உன்னத அடையாளம் ( icon ) என்றால் அது மிகையல்ல...!!
மூத்த தோழர்களான கே பி ஜானகியம்மாள், என். சங்கரய்யா ,
ஏ பாலசுப்ரமணியம் , பி ராமச்சந்திரன் ,
என் வரதராசன் போன்றவர்களால் செதுக்கப்பட்ட தோழர் நன்மாறன் குடத்திலிட்ட விளக்கு..!!
திண்டுக்கல் ரோட்டரி மன்றம் சார்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு அழைக்கப் பட்டிருந்தார் . நினைவுப்பரிசு தரப்பட்டு கவுரவிக்கப்பட்டார் . பின்னர் விழாவின் நிர்வாகியும் வங்கி ஊழியருமான தோழர் பி ஏ பி நாதனின் இரு சக்கர வாகனத்தின் பின்னாலமர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்தார் .
எனது மாமியார் காலமாகி ஒரு வாரமாகியிருந்த சமயம் . எனது மாமனார் தோழர் அறம் அவர்களிடமும் எங்களிடமும் துக்கம் கேட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவரை மதுரைக்கு வழியனுப்ப பேருந்து நிலையம் அழைத்து சென்றேன்.
மதுரை செல்லும் பேருந்துக்குள் ஏறிய அவர் கீழேயிறங்கி அவசரமாக தனது பையைத் திறந்து அவருக்கு தரப்பட்ட நினைவுப்பரிசை என் கையில் கொடுத்துவிட்டு, " வீட்டில் வைத்தே கொடுக்க எண்ணினேன் .. மறந்திருச்சு.. என் வீட்டுக்குத்தான் வந்திருக்கீங்களே ...!! ஆளு உட்காரவே இடமில்லை.. இதையெல்லாம் எங்க கொண்டு வைக்க..?? சொல்லுங்க.. மணி..!! என்று பரிதாபமாகக் கூற , " உங்களுக்கு தரப்பட்ட நினைவுப்பரிசை நான் பெற்றுக் கொள்வது முறையல்ல.. அது உங்களிடம்தான் இருக்க வேண்டும் " எனக் கூறி அந்த நல்லவரை வழியனுப்பி வைத்தேன்.
விழிகளில் நீர் வழிய .!!
மேடையில் நின்று தனது நகைச்சுவை உரையால் குலுங்கக் குலுங்க அனைவரையும் சிரிக்கவைக்கும் மேடைக் கலைவாணர் அன்று கண்ணீர் சிந்த வைத்தார் என்னை..!!
உடல்நலக் குறைவு ஏற்படும் போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்கும் அவரைக் காணும் போதில் சட்டமன்றத்தில் பத்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு மதுரைக்கு புத்தகங்களும் துண்டும் கொண்டிருந்த பையுடன் திரும்பியபோதில் தோழர் நிருபன் சக்கரவர்த்தி அவர்களை நினைவுபடுத்தும் நன்மாறன் அனைவருக்கும் நல்ல முன்மாதிரி..!!
அவர் நலமுடன் பல்லாண்டுகள் வாழ
நல்வாழ்த்துக்கள்..!!-
- ஆர்.எஸ்.மணி
புதுயுகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக