திங்கள், 26 அக்டோபர், 2020

வெண்கலக்குரலோன் எஸ்சி.கிருஷ்ணன் பாடல்கள்.. துணை நடிகனாக துவங்கி பாடகரானார்.

எஸ்சி.கிருஷ்ணன் -
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன்
  ப.க
விதா குமார் :
· வெண்கலக்குரலோன் எஸ்சி.கிருஷ்ணன் பாடல்கள்
மல்டி பிளக்ஸ் தியேட்டர் தலைமுறைகளுக்கு மத்தியில் டெண்டு கொட்டகை தலைமுறை பாடகரை எழுதுவது மிக அவசியமென கருதுகிறேன். நேற்று பார்த்த படத்தின் பாடல் மனதில் தங்காத இன்றைய சினிமா சூழலில், 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களின் வரிகள் மனதில் நிற்கிறதென்பதால் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாத பழைய சினிமாக்களின் காலம் பொற்காலம் தான். மதுரை கோ.புதூரில் ஆத்திக்குளத்தில் வீரலெட்சுமி டெண்டு கொட்டகை இருந்தது. எனது பால்ய காலத்தின் பெரும்பாலான நாட்கள் கழிந்தது அந்த திரையரங்கில் தான்.
எம்ஜிஆர் படங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். தரையில் அமர்ந்து படம் பார்க்க 15 பைசா, பென்ஞ்சில் அமர 30 பைசா, சேரில் அமர 50 பைசா தான் கட்டணம். ஆற்று மணல் குவிக்கப்பட்ட தரையில் அமர்ந்து படம் பார்ப்பது அலாதி ஆனந்தம்.
முன்னால் இருப்பவர் மணலை குவித்து அம்பாரமாக்கி அமர்ந்திருந்தால், பின்னால் இருப்பவருக்கு படம் தெரியாது. அதனால், பின்னால் இருப்பவர் மணலை சுரண்ட, சுரண்ட முன்னால் இருப்பவரின் உயரம் குறையும். இப்படி படம் பார்த்த தலைமுறையில் கடைசி பிரதிநிதிகளில் நானும் ஒருவன்.
எம்ஜிஆர், கமல், ரஜினி படங்கள் என்றால் 2 வாரங்கள் அத்தியேட்டரில் ஓடும். மற்ற படங்கள் 3 அல்லது 4 நாட்கள் தான். 2 வாரப்படங்களுக்கு இரண்டு சக்கர வால்போஸ்டர் ஒட்டிய வாகனம் முன்னால் செல்ல, பேண்டு வாத்தியம் முழங்க அப்படியொரு விளம்பர காலம். சிவாஜி படம் என்றால் திரையரங்கு பக்கமே தலைவைக்க மாட்டேன். பல முறை படங்களைப் பார்த்தால் இன்றுவரை பாடல்களின் வரிகள் மனதில் தங்கியிருக்கின்றன.
அப்படியொரு பாடல் தான் , சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் அத்தானை பாத்து அசந்து போய் நின்னாலாம்". பாடலைக் கேட்டவுடன் தன்னாலே ஆட்டம் வந்து விடும். 1959ம் ஆண்டு வெளியான வண்ணக்கிளி படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளியான படத்தில் இடம் பெற்றது தான் இப்பாடல்.
கவிஞர் மருதகாசி எழுதி எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா பாடிய இப்பாடலில் எத்தனை விதமான தமிழரின் இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டிருக்கின்றன என நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது. கரகாட்டம் ஆடுபவர்களும், எழவு வீடுகளில் வாத்தியம் வாசிப்பவர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் இது தான்.
இவ்வளவு பெரிய அடிப்பாடலில் சந்தத்தொகையில் கவிஞர் விளையாடி இருப்பார். அதில் எஸ்.சி.கிருஷ்ணன், " முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம் " என்று பாடும் போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும். இப்படியான பாடல்கள் இப்போது வருகிறதா?
எனக்குத் தெரிந்து பாடகர் என்றால் டிஎம்.சௌந்தராஜன் தான். ஏனென்றால், எம்ஜிஆர் பாடலை அதிகம் அவர் தான் பாடியுள்ளார். அதனால், மிக இயல்பாக அவர் குரலைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால், எஸ்.சி.கிருஷ்ணன் குரல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
விபரம் தெரிந்த வயதில் டேப்ரிக்காடர் வாங்கிய போது, எஸ்.சி.கிருஷ்ணன் பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தமிழில் துள்ளல் இசைக்கு ஒத்திசைவான குரல் அவருடையது.
சிவகங்கை மாவட்டத்தில் 1929ம் ஆண்டு நகைத்தொழிலாளியின் மகனான பிறந்த எஸ்.சி.கிருஷ்ணன் முதலில் டிகேஎஸ் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி ஆகியோரின் நாடகக்குழுவில் நடித்து வந்தார்.
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகத்தில் நடித்ததன் மூலம், அவரின் அன்பைப் பெற்றார். இதன் பின் திரைத்துறையில் துணை நடிகனாகத் தான் அவர் வாழ்வு துவங்கியது. அதன் பின்பே பாடகரானார்.
கட்சி கூட்டங்களுக்குப் போகும் போது கட்டாயம் எஸ்சி.கிருஷ்ணன் பாடலை கேட்காமல் இருக்க முடியாது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய
நல்வாக்கு நீ போடடி நான் நாலு நாளில் வந்திடுவேன் என்ற பாடலை எஸ்சி.கிருஷ்ணன் பாடினார். அப்பாடலில் செல்வக்களஞ்சியமே எனச்சொல்லி விட்டு அரற்றுவார். இப்படியான முயற்சிகளை தனது பாடல்களில் தொடர்ந்து அவர் செய்து வந்தார்.
நடிகர் டணால் தங்கவேலுவிற்கு பொருத்தமான குரலாய் எஸ்சி.கிருஷ்ணன் குரல் அமைந்தது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் , ராஜராஜன் படத்தில் எம்ஜிஆருக்கு எஸ்சி.கிருஷ்ணன் குரல் கொடுத்தார். பூசாரி வேடம் போட்டு எம்ஜிஆர் படிக்கும் "ஆயி மகமாயி" பாடலை அருமையாக பாடியிருப்பார்.
சிவாஜிக்கு அவர் பாடிய "பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ" என்ற பாடலில் எஸ்சி.கிருஷ்ணன், கடைசியாக வைக்கும் டிவிஸ்ட் மியாவ், மியாவ் என்ற வார்த்தை கேட்கும் போதே வித்தியாசமாக இருக்கும்.
தமிழ் திரையிசைப் பாடகர்களில் சீர்காழி கோவிந்தராஜனுக்கு அடுத்து எஸ்சி.கிருஷ்ணனுக்கும் வெண்கலக்குரல் என்றே சொல்லலாம். அவருடைய ஒவ்வொரு பாடலும் வார்த்தை சுத்தமாக தான் எதிரொலித்தது. அதனால் தான் இன்றளவும் அவர் ஞாபகத்தில் நம் பக்கத்தில் நிற்கிறார்.
எண்ணற்ற பாடல்களை எஸ்சி.கிருஷ்ணன் பாடியிருந்தாலும் புகழ்பெற்ற சில பாடல்களை பட்டியலிட்டுகிறேன்.
பாண்டியன் நானிருக்க ஏண்டி உனக்கென்மேல், ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா, மை டியர் மீனா உன் ஐடியா என்னா, அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம், கலப்படம் இது கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம், பி.ஓ.ஒய் பாய்..பாயின்னா பையன், நல்வாக்கு நீ போடடி நான் நாலு நாளில் வந்திடுவேன், சேதி கேட்டோ சேதி கேட்டோ, சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே,மண்ணை நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா, அத்தானும் நான் தானே, பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க, செத்தாலும் விடமாட்டேன், கண்ணாலே வெட்டாதே சும்மா கண்ணாலே வெட்டாதே,ஹலோ டார்லிங் பறந்தோடி வா, கைகளிரண்டில் வளை குலுங்க, மானத்தைக் காப்பதும் பொண்ணு நல்ல மகிழ்ச்சியைத் தருவதும் பொண்ணு, அலங்காரம் அலங்காரம் நீயே எந்தன் சம்சாரம், அடக்கிடுவேன் அடக்கிடுவேன்,இருக்கும் வரையில் ரசிக்கணும் நீ இன்பமாக இருக்கணும், எல்லும் ஓவும் வீயும் ஈயும் லவ்வு, சிட்டு போல நடந்து வார, நெத்தியிலெ நீல நிறப்பொட்டு, வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே.
தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற எஸ்சி.கிருஷ்ணன் 1983 ம் ஆண்டு காலமானார். ஆனாலும், எக்காலத்திலும் அவர் பாடல் வாழும்.
- ப.கவிதா குமார்
🍁 மீள்....
புகைப்படம் : எஸ்சி கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன்.

கருத்துகள் இல்லை: