புதன், 28 அக்டோபர், 2020

ரங்கராஜ் பாண்டே ஏன் வெறுமையாக காட்சி அளிக்கிறார்? எங்கே போனது அந்த கூச்சல்?

Abilash Chandran  :   ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சங்கிகளின் தகிடுதித்தங்கள்.   ரங்கராஜ் பாண்டே ஒரு திறமையான பேட்டியாளர், செய்தியாளர், ஆனால் காட்சி ஊடகத்தில் இருந்து விலகிய பின் அவருடைய ஒரு முக்கிய குறை வெளிப்படுகிறது - அவருக்கு பதில் அளிக்கத் தெரியாது. அவர் சுயவிளக்கம் கொடுத்து எதைப் பற்றியாவது வாதிடுகிற நிலை ஏற்பட்டால் ஒரு அறிவுஜீவிப் பட்டத்தை சுமக்கு கோமாளியைப் போன்று பரிதாபமாகத் தோன்றுகிறார். நேற்று மனுதர்மத்தை நியாயப்படுத்தி அவர் வெளியிட்ட யுடியூப் காணொலியைப் பார்த்த போது இந்த எண்ணம் உறுதிப்பட்டது. அப்படியே தமிழகத்தில் உள்ள விளக்கெண்ணெய் சங்கிகளின் கருத்துக்களை அங்கங்கே சில புத்தக மேற்கோள்களைக் காட்டி நிரூபிக்க முயன்று பரிதாபமாய் தோற்கிறார்:

பாண்டேவின் கேள்வி: பழமைவாதம், ஆணாதிக்கம், பொதுவான நம்பிக்கைகள் அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கும் மனு தர்மத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகம் முழுக்க இந்த பிரச்சனைகள் இல்லையா? கிறித்துவத்தில் இல்லையா, இஸ்லாத்தில் இல்லையா? ஆணாதிக்கம் என்ன இந்துக்கள் கண்டுபிடித்ததா அல்லது அது மனுதர்மத்தால் உருவாக்கப்பட்டதா? 
நம் பதில்: அடப் பதரே, அதைத் தான் நாங்களும் சொல்கிறோம். பிற்போக்கு, அடிப்படைவாத சிந்தனைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை மதத்தில் இருந்தே பிறக்கின்றன. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பெரியார் எந்த மதத்தையும் ஏற்கவில்லை. அம்பேத்கர் இந்து மதத்தையும் கிழித்து தொங்க விட்டதைப் போல இஸ்லாத்தையும் தான் செய்தார். இந்தியாவில் முற்போக்காளர்கள் சிறுபான்மை மதத்தினரை அப்படித் தாக்குவதில்லை, காரணம் இந்தியா-பாக் பிரிவினை வன்முறைக்குப் பின்னர் இங்கு ஏற்பட்ட சிறுபான்மை மத விரோத நிலை, அப்போது பலவீனமாக உள்ள சிறுபான்மையினருடன் தாம் நிற்க வேண்டும் என முற்போக்காளர்கள் கருதுகிறார்கள். அது ஒரு அரசியல். ஆனால் கருத்து நிலையில் அவர்கள் இஸ்லாம், கிறித்துவத்துக்கும் எதிரானவர்களே.
பெண்ணியம் நீண்ட காலமாய் சமத்துவத்துக்காக போராடி வருகிறது, ஆனால் அது பெரும் வெற்றி அடையாததற்கு மேற்கில் கிறித்துவம், மற்ற பகுதிகளில் இஸ்லாம், இந்தியாவில் இந்துமதம் போன்றவற்றை அவர்கள் நேரடியாக எதிர்க்க முனையாதது முக்கிய காரணம்.
மீண்டும் விசயத்துக்கு வருகிறேன் - இந்தியாவில் பார்ப்பனிய இந்துமதமே பெரும்பான்மை மதம் என்பதால் பார்ப்பனியத்தை பலவீனப்படுத்தினால் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்கள் (பெண்களையும் உள்ளடக்கி) பிழைக்க முடியும். இது இந்து விரோதம் அல்ல, பார்ப்பனிய விரோதம் எனும் மானுட நேயம்.
பாண்டே போன்றவர்களின் அற்ப தந்திரத்தை பாருங்கள்: இந்த நாட்டின் எல்லா நன்மைகளும் இந்து மதத்தால் ஏற்படுகின்றன, ஆனால் தீமைகள் மட்டும் மனித குலத்துக்கு பொதுவானதாம்.
நன்மைகளைப் போன்று தீமைகளும் இந்து மதத்துக்குள்ளேயே இருக்கின்றன. இந்து மதத்தை அழிப்பது எங்கள் நோக்கம் அல்ல. அதை பார்ப்பனர், சனாதனிகள் (ரங்கராஜ் பாண்டேக்கள்) வசமிருந்து காப்பாற்றுவதே நோக்கம். ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து உங்களைக் காப்பாற்ற முயலும் போது ரத்தம் வரும் தான், வலிக்கும் தான், ஆனால் இறுதியில் உங்களுக்கே அதனால் நன்மை.
சங்கிகளின் கேள்வி: சீர்திருத்தவாதிகள் இந்து மதத்தை உங்களைப் போல தாக்கியதில்லையே?
நமது பதில்: விவேகானந்தர் பார்ப்பனியத்தை கேள்வி கேட்டவர் அல்ல. பார்ப்பனிய வைதீக மதத்தை உலகம் முழுக்க பரப்ப உதவியர். அவர் ஒரு பார்ப்பனிய ஏஜண்ட். அவர் சாதியத்தைப் பற்றி என்ன சொன்னார்?
“உலகம் முழுக்க நான் சாதி அமைப்புகளைக் கண்டுள்ளேன், ஆனால் இந்தியாவில் உள்ளதைப் போன்று மகத்தான திட்டத்தின், நோக்கத்தின் கீழ் சாதியமைப்பு இயங்குவதை வேறெங்கும் நான் கண்டதில்லை” என அவர் இங்குள்ள சனாதன சாதி அமைப்பை பாராட்டினார். அதனாலே இன்றும் நீங்கள் விவேகானந்தரைக் கொண்டாடுகிறீர்கள்.
உண்மையான சீர்திருத்தவாதிகள் நமது சித்தர்களும் பெரியாருமே. பார்ப்பனியத்தை எதிர்க்காத எவனும் இந்து மத சீர்திருத்தவாதி ஆக முடியாது.
பாண்டேயின் கேள்வி: இங்கிருக்கும் அனைத்தையும் மனு தர்மத்தோடு இணைகிறீர்கள்?!.. இதற்கு என்ன ஆதாரம்? மனு தர்மம் இந்துக்கள் அனைவருக்கும் வழிபாட்டு நூல் அல்லவே?
நமது பதில்: மனுதர்மம் பார்ப்பனிய தர்ம நூல். அதை வழிபாட்டு நூல் அல்ல. அதை எதிர்ப்பதானது ஒரு பார்ப்பனிய எதிர்ப்பு.
பாண்டேயின் கேள்வி: இத்தனைக்கும் மனுதர்மம் வழக்கிலேயே இல்லை..
நமது பதில்: மனுதர்மம் வழக்கில் உள்ளது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. மனுதர்மம் நீதிபதிகளால் மேற்கோள் காட்டப்படுகிறது. அது வலியுறுத்துகிறபடியே பார்ப்பனியர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் தொடர்ந்து வீற்றிருக்கிறார்கள். அது வலியுறுத்துகிறபடியே நமது சாதி அமைப்பில் படிநிலை இன்றும் வகுக்கப்படுகிறது. அது வலியுறுத்துவதன் படியே இந்தியா முழுக்க கோயில்களில் பூசாரிகளாக பிராமணர்கள் வீற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் சூத்திரர்கள் பூசாரிகளாக சட்டம் அனுமதித்தாலும் அரசு அனுமதிக்கவில்லை. திராவிட கட்சிகள் இங்கு சுமார் அரைநூற்றாண்டாக ஆட்சியில் இருந்தாலும் பார்ப்பனியம் (கவனியுங்கள், பிராமணர்கள் அல்ல) தொடர்ந்து எல்லா தளங்களிலும் ஆளுகை செலுத்துகிறது. திராவிடத்தால் கூட வீழ்த்தமுடியா வண்ணம் அது அத்தனை வலுவாக உள்ளது. ஆக மனுதர்மம் மீண்டும் மீண்டும் எரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
எங்கள் நோக்கம் பிராமண எதிர்ப்பல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு. இந்து மதத்தில் பார்ப்பனியம் ஒரு புற்றுநோயைப் போலப் புகுந்து அதன் செல் அமைப்பை மாற்றி வைதீக இந்துமதத்தை உண்டு பண்ணி பரப்பி இருக்கிறது. அதை வெளியேற்றி ஒரு அவைதீக இந்து மதத்தை நிலைகொள்ள வைத்தாலே மக்கள் முதல்கட்ட விடுதலை பெறுவர். பாஜக இங்கு இந்து மத பிரதிநிதி அல்ல, பார்ப்பனீய பிரதிநிதி. இங்கு மோதல் திருமாவுக்கும் இந்துக்களுக்கும் இடையில் அல்ல, திருமாவுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் அல்ல, திருமாவுக்கும் பார்ப்பனியத்துக்கும் எதிராகவே.
பாண்டேயின் கேள்வி: மனுதர்மம் அல்ல, மற்ற இரு நூல்கள் - பைபிள், குரான் - அல்லவா இன்றும் வழிபாட்டில் உள்ளன? அவற்றை அல்லவா கொளுத்த வேண்டும்?
நமது பதில்: பைபிளையும், குரானையும் கொளுத்த வேண்டியது அம்மதங்கள் பெரும்பான்மையாக உள்ளது மக்களின் பொறுப்பு. ஒருவருக்கு கொரோனா வந்தால் அவர் தான் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய மக்களுக்கு பார்ப்பனியத் தொற்று வந்தால் நாம் தான் மருந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ரெண்டு பேருக்கும் ஒரே மருந்தை எடுக்கச் சொல்கிறார்கள் பாண்டே போன்றவர்கள். அதை ஏற்க நாங்கள் மடையர்கள் அல்ல.
பாண்டேயின் கேள்வி: இந்து சமூகத்தில் உள்ள பல்வேறு குறைகள் காலப்போக்கில் களையப்பட்டு வருகின்றன. ஏன் ஒரு பழங்கால பிரதியான மனுதர்மத்தை இப்போது எரிக்கப்பட வேண்டும்? காலப்போக்கில் சீர்திருத்தம் தானே நிகழாதா?
நமது பதில்: விதவை மறுமணம், கைம்பெண்ணை நெருப்பில் இடுவதன் மீதான தடை, குழந்தை மணம் மீதான தடை போன்றவை தானே காலப்போக்கில் மக்களே நினைத்து ஏற்படுத்திக் கொண்டவை அல்ல. அவை சனாதனவாதிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் (ஆங்கிலேய, இந்திய) அரசுகள் கொண்டு வந்த சீர்திருத்தங்கள். ஆம், ராஜ்மோகன் ராய், வித்யாசாகர் போன்றோர் மூடநம்பிக்கைகள், சமூக இழிவுகள் சிலவற்றை எதிர்த்தார்கள், ஆனால் மேல்சாதிகளில் இந்த சீர்திருத்தம் ஏற்பட வேண்டும் என நினைத்த இவர்கள் பார்ப்பனிய வேதாந்தத்தையும் தான் ஒரே சமயம் தூக்கிப் பிடித்தார்கள். அதாவது நோயின் வேரை அறுக்காமல் வலிநிவாரணியைத் தந்தார்கள். சீர்திருத்தங்கள் காலப்போக்கில் தானே ஏற்பட்டவை என்பது பார்ப்பனியர்கள் பொய்ப் புரட்டு. எதிர்ப்பும் அதன் விளைவான மாற்றங்களுமே சீர்திருத்தமாகின்றன, உள்ளிருந்து ஜால்ரா அடிக்கிறவர்களின் செயல்கள் அல்ல. உ.தா., ஓஷோவில் இருந்து ஶ்ரீஶ்ரீ, நித்தியானதா வரை என்ன சீர்திருத்தங்களை செய்தார்கள்? அவர்கள் சாதியை, தீண்டாமையை எதிர்த்தார்களா? மூடப்பழக்கங்களை மறுத்தார்களா? இல்லையே. கோல்வால்கர் முதல் சோ.ராமசாமி வரை யாரேனும் அதை செய்தார்களா? இல்லையே.
காலப்போக்கில் தானே நடக்கும் என நீங்கள் மாற்றங்களைத் தள்ளிப் போடுவது உங்களுக்கு இப்போது கிடைக்கும் வசதிகள், அதிகாரங்கள் பறிபோய் விடக் கூடாது எனும் பயத்தினாலே.
பாண்டேயின் கேள்வி: மூச்சுக்கு முன்னூறு தடவை அம்பேத்கரை மேற்கோள் காட்டும் திருமா இடஒதுக்கீடு விசயத்தில் அம்பேத்கரின் பரிந்துரையை ஏற்கத் தயாரா?
நமது பதில்: அம்பேத்கர் சொன்னது ‘இடஒதுக்கீடு ஒரு நிரந்தரத் தீர்வல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள் சமமான வாய்ப்புகள் மூலம் முன்னேறி இடஒதுக்கீடு தேவையற்ற நிலை ஏற்பட வேண்டும்’ என்பதே. ஆனால் அது நிகழாத வரை இடஒதுக்கீட்டை தக்க வைப்பதே நியாயம். அம்பேத்கரும் அதையே விரும்பியிருப்பார். மேலும் இந்த சாதி அமைப்பை தக்க வைக்கிற பார்ப்பனிய சூழ்ச்சி தான் இப்போது இடஒதுக்கீட்டையும் தடை செய்யக் கேட்பது நகைமுரணாகும்.
பாண்டேயின் கேள்வி: பெண் விடுதலைக்காக பேசும் ஆண்களை நம்பாதே என பெரியார் கூறுகிறாரே, எனில் திருமாவின் அரசியல் பெரியாரை வைத்துப் பார்த்தால் அம்பலப்பட்டுப் போகிறதே?
நமது பதில்: இது தான் உங்கள் பார்ப்பனிய திசைதிருப்பும் வாதம். பெண்களுக்கு விடுதலை வேண்டும் எனில் பெண்களே அதற்குத் துணிய வேண்டும் என்பதே “பெண் ஏன் அடிமையானாள்?” நூலில் பெரியார் கூறும் கருத்து. ஆண்கள் பெண்ணியம் பேசலாம், ஆனால் ஆணாதிக்க கட்டமைப்பின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே ஒரு ஆணால் சுலபத்தில் பெண் விடுதலையையும் கோர முடியாது என்கிறார் பெரியார். பெண்ணியம் பேசும் ஆண்கள் கயவர்கள் என்பதல்ல அவரது பார்வை. மேலும் ஒட்டுமொத்த பெண் விடுதலைக்கு தானே பொறுப்பு என திருமா எங்கும் கோரிக் கொண்டதில்லை.

கருத்துகள் இல்லை: