ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கலெக்டர்கள் மாற்றம்! அரசியல் பின்னணியா?

மின்னம்பலம்:  தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நேற்று (அக்டோபர் 24) தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராகப் பணியாற்றிய மகேஸ்வரி, காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல தருமபுரி கலெக்டராக இருந்த மலர்விழி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் கலெக்டராக இருந்த அன்பழகன், மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கலெக்டராக இருந்த வினய், சேலம் பட்டுப் புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்தா சாந்தா, திருவாரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு அந்த இடத்தில் வெங்கடப்பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பெருமளவிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் அதிகாரிகள் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இரண்டு வருடங்கள் கலெக்டராகப் பணிபுரிந்தவர்கள் மாற்றப்படுவார்கள். தற்போது சில கலெக்டர்கள் அதற்கு மேலும் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: