ஞாயிறு, 29 மார்ச், 2020

புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த WHO

BBC : கோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.
>கோவிட் 19 நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக சுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்புவது நல்லது"
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உள்ள மலேசியர்கள் மிக விரைவில் தாயகம் திரும்புவது நல்லது என மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிசாமுடீன் உசேன் அறிவுறுத்தி உள்ளார்.

அவ்விரு நாடுகளும் தங்கள் எல்லைகளை இன்னும் மூடவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"இரு நாடுகளும் எல்லையை முடுவதற்கு முன் முடிவெடுக்க வேண்டும். இப்போது அவ்விரு நாடுகளை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதால் மலேசியர்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பது எனது அறிவுரை.
"எல்லைகளை மூடியபிறகு இருநாடுகளிலும் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப விரும்பினால் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்வது பெரும் செலவை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உள்ள அனைத்து மலேசியர்களையும் தாயகம் அழைத்து வரவேண்டுமானால், அதற்கு 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும். மாறாக, அந்தத் தொகையைக் கொண்டு நல்ல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்கலாம்," என்று ஹிசாமுடீன் உசேன் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியர்களை தாயகம் அழைத்துவர மூன்றாம் தரப்பின் உதவியுடனேயே சாத்தியமானது" என்பதைச் சுட்டிக் காட்டினார்.
தற்கொலை செய்த ஆடவரால் பெரும் பரபரப்பு:
இத்தகயை சூழலில் கோரோனா கிருமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட அந்த 62 வயது நபர் செர்டாங் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
<>இந்நிலையில் குளியலறைக்குச் சென்ற அந்நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாதியர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அப்போது அம்முதியவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதைக் கண்டு அதிர்ந்தார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இனி ஜாகிங் செய்தாலும் கைது:
இதற்கிடையே உடற்பயிற்சி என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மலேசிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெதுவோட்டம், நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி கோலாலம்பூரில் மெதுவோட்டத்தில் ஈடுபட்ட இரு மலேசியர்கள் உள்ளிட்ட 11 பேர் கைதாகினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி மஸ்லான் நசிம் கைதானவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒரு இங்கிலாந்து பிரஜை, 4 ஜப்பானியர்கள், 2 தென்கொரியர்கள் ஆகியோருடன் இந்தியக் குடிமகன் ஒருவரும் அடங்குவர் என்றார்.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் போலிசார் குறிப்பிட்ட அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது குறிப்பிட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்த சில தினங்களுக்கு உடற்பயிற்சியை வீட்டிற்குள்ளேயே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பவர்கள், அதன் தரைத்தளத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: