திங்கள், 30 மார்ச், 2020

கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம்: தகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!


கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம்: தகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!மின்னம்பலம் : கிழக்கு டெல்லியின் ஆனந்த விகார் பகுதியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கனமான பைகளுடனும் தங்களது பச்சிளம் குழந்தைகளை தலையில் சுமந்துகொண்டு சிறுவர்கள், வயதானவர்களுடன் இடைவிடாமல் அணிவகுத்துச் சென்ற காட்சியை கடந்த இரண்டு நாட்களில் நாம் பார்க்காமல் இருந்திருக்கமாட்டோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க இவ்வளவு வேகமாக அவர்கள் செல்லவில்லை. பசி, பட்டினியிலிருந்து தப்பிக்க தங்கள் சொந்த ஊரை நோக்கி விரைகிறார்கள்.
ஊரடங்கால் தொழிலாளர்களின் வேலை ஒரே இரவில் முடிவுக்குவந்துவிட்டது. வருமானம் இல்லை, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, தங்கியிருக்கும் இடத்துக்கு வாடகை செலுத்த பணம் இல்லை உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான மைல்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவது என தீர்மானித்து நடைபயணமாகவே சென்றுகொண்டிருக்கின்றனர்.

> இந்த சோகமான சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்ததையடுத்து, அவர்களை கிராமங்களில் கொண்டுசேர்க்க டெல்லி அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்தது. டெல்லி பெருநகரமே ஊரடங்கில் இருந்ததால், குருகிராமிலிருந்து பஸ் முனையத்தை அடையவும் அவர்கள் வெகுதூரம் வரை நடக்க வேண்டியிருந்தது.
டெல்லி மட்டும் இந்த சம்பவம் நிகழவில்லை. நாடு முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் நடந்தே தங்களது கிராமங்களுக்கு செல்லும் இருண்ட காட்சிகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்தினால் அது விளிம்பு நிலை மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த சம்பவங்கள் வெளிக்காட்டுகிறது.
“ஊரடங்கை எவ்வளவு காலம் எங்களால் சமாளிக்க முடியும். இங்கு ஒரு வேலையும் இல்லை, கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து கஷ்டப்படுவதை விட வீட்டிற்குச் செல்வதே நல்லது” என்று சொல்கிறார் நொய்டாவில் தினக்கூலியாக பணியாற்றும் சுனில் சிங். இவருடைய சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அமோரா.
சுனில் சிங்கைப் போலவே காசியாபாத்தில் பெயிண்டராக பணியாற்றும் 34 வயதான புதிரிம்குமார், என்ன ஆனாலும் பரவாயில்லை என தனது சொந்த ஊரான பந்தேல்கண்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். “ஒரு புறம் பட்டினி கிடக்க வேண்டிய பயமும், மறுபுறம் கொரோனா வைரஸின் பயமும் எங்களை துரத்துகிறது. நகரங்களில் இறந்தால் யாரும் கவலைப்படுவதில்லை. ஊருக்குச் சென்றால் குறைந்தபட்சம் எங்கள் மக்களோடாவது தங்குவேன்.” என்று புதிரிம்குமார் சொல்கிறார். இருவரையும் போலவே இந்தியாவின் 90 சதவிகித புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை இருக்கிறது.
2017-18 ஆம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பின்படி ( The Economic Survey) 87% நிறுவனங்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி, வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைக்கு வெளியில் உள்ள சமூகத்தில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பிரிவுகளை காக்க வழிவகுப்பார்கள் என்று தெரிவித்திருந்தது. இது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
மார்ச் 22 ஆம் தேதி ஒருநாள் மட்டும் மக்கள் ஊரடங்கு என்று தொடங்கியது, ஐதராபாத்திலுள்ள உணவகத்தில் பணியாற்றும் அங்கித்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது. “நாங்கள் அதிருஷ்டசாலிகள், ஏனெனில் எங்களது உரிமையாளர் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை எங்களுக்குத் தருவதாகக் கூறினார். ஆனால், ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடர்ந்தால், நான் எப்படி வாழ்வேன் என்று தெரியவில்லை” என்று கூறுகிறார் அங்கித்.
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பஸ் முனையத்தில் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட குழப்பம், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இந்தியா எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால் ஏற்பட்ட மனித சோகத்தை படம்பிடிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுவது சமூக தொற்று ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. “21 நாட்கள் ஊரடங்கு மத்திய அரசால் சிறப்பாக திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். மக்கள் தங்கள் கிராமத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் கோபப்படுகிறார்கள்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத பீகார் அரசு உயர் அதிகாரி.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் எதிரொலிக்கின்றன. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வீடு திரும்ப வேண்டும் என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரால் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தொழிலாளர்களுக்கு தெரியவில்லை என்பதால் அவர்களை அது வெகுவாக ரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால், நீண்ட தூர நடைபயணம்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரே எஞ்சிய வழியாகும்.
“நாங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களிடம் உள்ளதை வைத்து சமாளித்துக்கொள்கிறோம். நாங்கள் கடையைத் திறக்க முயன்றாலும், காவல்துறை எங்களை அடித்து கடைகளை மூடுகிறது " என்று சொல்கிறார் பெங்களூரு கடையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளரான முகமது நசிமுதீன்.
தானேவில் ஒரு கட்டுமான தளத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை, அவர்களின் ஒப்பந்ததாரர் கைவிட்டுவிட்டார் எனக் கூறும், மஜ்தூர் சங்கதனின் தலைவர் மதுகந்த் பதரியா, “வைரஸ் அவர்களைக் கொல்லவில்லை என்றால், பசி அவர்களை கொன்றுவிடும்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
உணவுக்காக கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுதொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விவசாயிகள் மற்றும் ஏழை தொழிலாளர்களுக்காக பணிபுரியும் மஸ்தீர் கிசான் சக்தி சங்கதன் அமைப்பின் நிறுவனர் நிகில் டே, “வீடு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கும், அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கும் உணவு மற்றும் பிற அத்தியாவசியங்களை கிடைக்கச் செய்வதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டதால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 23, 24 ஆகிய தேதிகளில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. “அரசின் உத்தரவை மதிக்காமல் இதனை விடுமுறை நாட்களாக எடுத்துக்கொண்டு, இப்படி கூட்டமாக பேருந்தில் சென்று கொரோனாவை பரப்பப்போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்றது எவ்வளவு நன்மை என்று நாங்கள் உணர்ந்தோம். விமர்சித்தவர்களும் தங்களது நிலையை மாற்றிக்கொண்டார்கள்” என்கிறார் சென்னையிலிருந்து அரியலூருக்குத் திரும்பிய ராஜேஷ்.
எனினும் 5 நாட்கள்தானே என்று சென்னையில் இருந்த தாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த சிலம்பரசன். “நான் சென்னையில் வார சம்பளத்தில் அடிப்படையில் கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறேன். தமிழக அரசு ஒருவாரம்தானே ஊரடங்கை அறிவித்துகிறது. அதை சென்னையில் இருந்தே சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், சென்னையில் பேருந்துகள் இயக்கம் முடிந்த பிறகு 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர். வாங்கிய சம்பளமும் தீர்ந்துவிட்டது.
இனிவரும் நாட்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கொரோனாவுக்கு பயந்து கடன் கொடுப்பவர்கள் யாரும் தற்போது கடனும் கொடுக்க முன்வருவதில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்தால்தான் எங்களுக்கு விடுதலை கிடைக்கும்” என்று தெரிவிக்கிறார் சோகத்துடன்.
பசி, பட்டினியால் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதும், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் பல தரப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது.
த.எழிலரசன்
நன்றி: லைவ் மிண்ட்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம் என நாட்கூலித் தொழிலாளரும் அழுகின்றனர்.

www.ypvnpubs.com