திங்கள், 30 மார்ச், 2020

கொரோனாவினால் பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் இறப்பு .. இலங்கை தமிழர்கள்

Jeevan Prasad : கொரோனாவினால் பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் மரணம்!
“கொரானா வைரஸ்” உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய திரு. சதாசிவம் லோகநாதன் என்பவர் நான்கு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே..
அதேபோல் பிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த கீர்த்தி எனும் திரு. குணரட்ணம் கீர்த்திகனின் தந்தையார் திரு. குணரட்ணம் அவர்களும் இன்றையதினம் சுவிஸ் நாட்டில் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கீர்த்திகன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே சுவிஸ் நாட்டிலுள்ள லங்கேந்தால் எனுமிடத்தில் உள்ள சகோதரி வீட்டுக்குச் சென்று தந்தையைப் பார்த்து வந்ததுடன் அங்கு நடைபெற்ற குடும்ப நிகழ்விலும் கலந்து கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சுவிஸில் உள்ள சகோதரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

அதேவேளை சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, (யாழில் கொரோனா பரவக் காரணமெனும் குற்றம் சாட்டப்படும்), மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் தற்போதுவரை உள்ள “சுவிஸில் “பீல்” பிரதேசத்தில் “தமிழ் கிறிஸ்தவ சபை” ஒன்றை உருவாக்கி “போதகராக” செயலாற்றும் திரு.பவுல் (போல்) சிவராஜா சற்குணராஜா அவர்களின் மாமியாரான திருமதி.தேவசோதி (மனைவியின் தாயார்) நேற்றுமுன்தினம் சுவிஸில் இறந்துள்ளார். இவர் இறந்ததுக்கான காரணத்தை வெளியிட குடும்பத்தினர் மறுத்து வரும் நிலையில், அவரது சடலத்தை பார்வையிட மற்றவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதினால், இவருக்கும் “கொரானா தொற்று” என அப்பிரதேசவாசிகளினால் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை லண்டனிலும் “கொரோனா தொற்று” காரணமாக திரு. சுந்தரலிங்கம் மெய்யழகன் அவர்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது.
தொடர் இழப்புக்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் மிகுந்த சொல்லொணாத் துயரத்தில் உறைந்து போயுள்ளனர். இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளிற்கும் நண்பர்களிற்கும் “அதிரடி” இணையம் சார்பாக எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி : அதிரடி.கொம்

கருத்துகள் இல்லை: