வியாழன், 2 ஏப்ரல், 2020

சீனா கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைத்து உலகை .. அமேரிக்கா குற்றச்சாட்டு

hindutamil.in/  : கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேயில் உள்ள வூஹானில் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் சுமார் 38,000 உயிர்களை பலி வாங்கியுள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்க எம்.பி.க்கள் சந்தேகிக்கின்றனர், மேலும் உளவுத்துறை தகவலையும் சுட்டிக்காட்டி சீனா உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்
இதனையடுத்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “நமக்கு எப்படி தெரியும்? அவர்கள் பலி எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகக் காட்டப்படுகிறது. மறைக்கிறார்கள், ஆனால் சீனாவுடனான நம் உறவு நல்ல முறையில்தான் உள்ளது” என்று கூறினார்.
அமெரிக்க ராணுவம்தான் கரோனா பரவலுக்குக் காரணம் என சீனா குற்றம்சாட்ட அமெரிக்காவோ சீனாதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று எதிர்க்குற்றச்சாட்டுகளை வைத்து இதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை நாம் அறிவோம். சதிக்கோட்பாட்டாளர்கள் சீனா தன் வர்த்தக நலன்களுக்காகவே இந்த வைரஸை பரப்பியது என்ற குற்றச்சாட்டுகளை வைத்தாலும் ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டும் புளூம்பர்க் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சீனா உலக நாடுகளை தவறாக வழிநடத்தி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது..
சீனாவின் கரோனா செய்திகள் அனைத்தும் பூர்த்தி பெறாதவை என்றும் அதன் பலி எண்ணிக்கை போலியானது என்றும் ப்ளூம்பர்க் ரகசிய உளவு ஆவணம் ஒன்றை வெள்ளை மாளிகைக்கு கடந்த வாரம் அனுப்பியதில் தெரிவித்துள்ளது.
சீனா அதிகாரபூர்வமாக 82,361 பேர்தான் உறுதி செய்யப்பட்ட கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என்றும் புதன் கிழமை நிலவரப்படி 3,316 பேர் பலியானதாகவும் தெரிவித்துதுள்ளது.
அமெரிக்காவில் மாறாக 2 லட்சத்து 6, 207 பேர் பாதிப்படைந்து 4,542 பேர் மரணமடைந்துள்ளனர். குடியரசுக் கட்சியின் செனட்டர் பென் சஸ்ஸே, சீனாவின் எண்ணிக்கைகளை “குப்பைப் பிரச்சாரம்” என்று ஒதுக்குகிறார். “அமெரிக்காவில் கரோனா வைரஸ் பலி சீனாவை விட அதிகம் என்பது பொய்” என்று சாடியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி பொய் சொல்லியது, இன்னும் பொய் சொல்லி வருகிறது. மேலும் பொய்யையே தொடரும்” என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இன்னொரு குடியரசுக் கட்சி உறுப்பினர் மைக்கேல் மெக்கவுல் என்பவர் உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி, “கோவிட்-19க்கு எதிரான போரில் சீனா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல” என்று சாடியுள்ளார்.
“மனிதனிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் குறித்து உலகத்திற்கு சீனா பொய்யுரைத்துள்ளது. உண்மையை கூற விரும்பும் பத்திரிகைகள், மருத்துவர்கள் வாயை அடைத்து விட்டது. தற்போது உண்மையான எண்ணிக்கையை மறைத்து வருகிறது” என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் மெக்கவுல்.
அமெரிக்க கரோனா மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பர்க்ஸ் கூறும்போது, “நமக்கு சீனாவிடமிருந்து முக்கியமான தரவுகள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: