புதன், 1 ஏப்ரல், 2020

மூன்றில் ஒரு பங்கு (மாநில) புலம்பெயர்ந்தோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா?


மின்னம்பலம் : சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து பணியாற்றிவந்த தொழிலாளர்கள், கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்தனர். ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் நடந்தே சென்றனர்.

இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம், போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவிகளை உறுதி செய்ய வேண்டுமென வழக்கறிஞர்கள் ராஷ்மி பன்சால், அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை சமாளிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று (மார்ச் 31) விசாரிக்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை மத்திய அரசு தடுக்கும். ஏனெனில், அது அவர்களின் ஊர் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். புலம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் 118 இடங்களில் கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 15,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
இதனையடுத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, தண்ணீர், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துத் தருமாறும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் பதிலளிக்கும் விதமாக 24 மணி நேரத்தில் இணையதளம் ஒன்றை துவங்க வேண்டும் எனவும், போலிச் செய்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. மேலும், வழக்கு வரும் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே ஏற்படக்கூடிய தொற்று விகிதம் பற்றிய அரசாங்கத்தின் கருத்து சுகாதார நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
“தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் ஏதேனும் உள்ளதா? அப்படி இருந்தால் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தும் அளவுக்கு அவர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பாதித்திருக்கலாம் என்பது அவர்களுக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்துவதோடு, தற்போது இருக்கும் நிலையை மிகவும் மோசமாக்கும்” என்கிறார் போபாலில் உள்ள உலகளாவிய சுகாதார ஆராய்ச்சியாளரான ஆனந்த் பான்.
”அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படமாட்டார்கள். ஏனெனில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் அவர்கள் நேரடி தொடர்பு கொள்ளவில்லை. கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு பயணங்கள் அல்லது பயணிகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருந்தனர்” என்று கூறுகிறார் தேசிய வளர்ச்சி மற்றும் சுகாதார ஆலோசனை நிறுவனமான ஐபிஇ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்வஜித் சிங்.
கொரோனா தொற்றின் மூன்றாம் நிலை என அழைக்கப்படும் சமூக தொடர்பு மூலம் வைரஸ் பரவுகிறது என்பதற்கு இன்னும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அரசாங்கத்தின் கருத்துடன், துஷார் மேத்தாவின் அறிக்கை பொருந்துவது போல இல்லை.
“கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களை கடுமையாக கண்காணிக்க வேண்டும்” என்று வர்த்தமான மகாவீர் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவம் துறை தலைவர் ஜூகல் கிஷோர் தெரிவிக்கிறார்.
சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், “புலம்பெயர்ந்தவர்கள் வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு இருந்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பல கட்டிடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கிராமப்புற இந்தியா பாதுகாப்பாக இருந்து வருவதாகவும், ஆனால் பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டால், கிராமப்புற இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊடுருவி ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.
கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது 5-6 லட்சம் வரையிலான புலம்பெயர்ந்தவர்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதுவரை 6,63,000 பேருக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: