ஞாயிறு, 29 மார்ச், 2020

கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகள்!

கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகள்!மின்னம்பலம் : கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் நலன் கருதி, இந்தியாவில் ரயில்களை மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமை வார்டுகளாக மாற்றியமைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதிலும் ஆறு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். முப்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதன் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் இதன் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவிலும் இதைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சத்தை அதிகரிக்கும் விதமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-ஐக் கடந்துவிட்டது.
குறைந்த மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில்கூட கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் சூழலில், மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில் சமூக பரவலாக அது மாறிவிட்டால் பேராபத்து நிகழ வாய்ப்புள்ளது.
எனவே பல்வேறு தரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இருக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கான மக்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக ரயில் பெட்டிகளை மருத்துவ வசதிகள் அடங்கிய வார்டுகளாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இயக்கப்படாமல் இருக்கும் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, வரிசையாக இருக்கும் மூன்று படுக்கைகளில் நடுவில் அமைந்துள்ள படுக்கையை மட்டும் நீக்கம் செய்துவிட்டு, கீழ்ப்படுக்கைகள் பிளைவுட் பலகைகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு பெட்டிக்கு 9 தனித்தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெட்டிக்கு நான்கு கழிவறைகள், இரண்டு குளியல் அறைகள் போன்றவையும் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ அறை, ஆலோசனை அறை, கேன்டீன் போன்றவை இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அஸ்ஸாம் காமாக்யாவில் ஐசொலேஷன் வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் இந்த சேவைக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: