வெள்ளி, 22 நவம்பர், 2019

BREAKING | மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே - சரத் பவார் அறிவிப்பு


மாலைமலர் : சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்தார். பா.ஜ.க. - சிவசேனா இடையிலான முதல்-மந்திரி பதவி போட்டியால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள்  கூட்டாக செய்தியாளர்களை நாளை சந்திக்க உள்ளோம்.

 மகாராஷ்டிரா விகாஸ் அகாதி என்ற பெயரில் 3  கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மேலும், அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவது என்பது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். கவர்னரை எப்போது சந்திப்பது என்பது குறித்தும் நாளை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சரத் பவார் கூறிய கருத்தையே, முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான பிரிதிவிராஜ் சவானும் தெரிவித்துள்ளார். < முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே, தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: