திங்கள், 10 ஜூன், 2019

கொழும்பு தேவாலயத்தில், குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி வீடியோ


தினத்தந்தி : இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொழும்பு, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதில் மாலத்தீவுக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று இலங்கை சென்றார். கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அன்போடு வரவேற்றார். பி
ன்னர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தேவாலயங்களில் ஒன்றான புனித அந்தோணியார் ஆலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

அதிபர் மாளிகைக்கு செல்லுமுன் நேராக இந்த ஆலயத்துக்கு சென்ற அவர், அங்கு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது குண்டுவெடிப்பின் சோக வடுக்களை காட்டும் புகைப்படங்களை ஆலய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு காட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‘பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் இலங்கையின் பலத்தை வீழ்த்த முடியாது. இந்த நிலையில் இருந்து இலங்கை எழுச்சி பெறும் என நம்புகிறேன். இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை நினைத்து என் இதயம் ஏங்குகிறது’ என்று குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின் இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார். இந்த தாக்குதலால் அதிர்ச்சியில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவின் உறுதுணையை தெரிவிப்பதாகவே மோடியின் இந்த பயணம் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அதிபர் மாளிகை சென்றார். அங்கு அவருக்கு அதிபர் சிறிசேனா தலைமையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பலத்த மழை பெய்ததால் மோடி நனையாமல் இருப்பதற்காக, சிறிசேனா குடை பிடித்துக்கொண்டு நடந்து வந்தது இருநாடுகளுக்கு இடையே நிலவும் உறவுகளின் மேன்மையை காட்டுவதாக இருந்தது.

பின்னர் இரு தலைவர்களும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட இந்த நிகழ்வின் போது பரஸ்பர நலன்கள் தொடர்பான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது பிரதமர் மோடிக்கு சிறிசேனா விருந்து அளித்தார். மேலும் புத்தர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு சிறிசேனா பரிசளித்தார். வெள்ளை தேக்கு மரத்தில் செய்யப்பட்ட இந்த சிலையை செதுக்குவதற்கு ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் இந்த சிலை, தியான முத்திரை என அழைக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘10 நாட்களில் 2-வது முறையாக அதிபர் சிறிசேனாவை சந்தித்தேன். இரு நாடுகளுக்கும் கூட்டு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் இருப்பதை நானும், சிறிசேனாவும் ஒப்புக்கொண்டோம். அத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிகழ்வின் போது அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து அதிபர் மாளிகையில் அசோக மரக்கன்று ஒன்றையும் பிரதமர் மோடி நட்டார்.

இதைத்தொடர்ந்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனும் பிரதமர் மோடி அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மக்கள் நலத்திட்டங்கள் மூலம் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என உறுதியளித்ததாக மோடி பின்னர் குறிப்பிட்டார்.

இதைப்போல இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் மோடியை சந்தித்தார். அப்போது மோடியின் தேர்தல் வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

முன்னதாக இந்த பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘எனது இதயத்தில் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு. இந்தியா எப்போதும் உங்களுடன் இருக்கும் என்பதையும், உங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்பதையும் இலங்கையை சேர்ந்த எனது சகோதர-சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். உங்களது வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தா

கருத்துகள் இல்லை: