புதன், 20 மார்ச், 2019

கோவாவில் இன்று பிரமோத் சாவந்த் நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா?

தினமலர்: பனாஜி: கோவா மாநில புதிய முதல்வராக பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் பதவியேற்ற நிலையில், இன்று(மார்ச் 20) அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட, கோவா மாநில முதல்வராக இருந்த, மனோகர் பரீக்கர், சமீபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து, கோவா மாநில புதிய முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வர்களாக, மஹாராஷ்டிர கோமந்தக் கட்சியை சேர்ந்த, சுதீன் தவாலிகர் மற்றும் கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த, விஜய் சர்தேசாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, இவர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் மூலம் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற கவர்னர், இன்று காலை 11.30 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.



40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையின் பலம் தற்போது 36ஆக உள்ளது. இதில் பா.ஜ., 12, ஜி.எப்.பி., மற்றும் எம்.ஜி.பி., கட்சிக்கு தலா 3, சுயேட்சை 3 என மொத்தம் பா.ஜ., கூட்டணியின் பலம் 21ஆக உள்ளது. காங்., கூட்டணியில் காங்., 14 மற்றும் தேசியவாத காங்., 1 உறுப்பினர் உள்ளனர்.

இந்நிலையில், ஓட்டெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என முதல்வர் பிரமோத் கூறினார். முன்னதாக கோவாவில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் காங்., உரிமை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: