செவ்வாய், 19 மார்ச், 2019

முற்பட்ட சாதிகள் வாக்கு: பாஜக - அதிமுக புதுத் திட்டம்! தமிழகத்தில் உள்ள பிற மாநில மக்களின் வாக்குகளும்...

டிஜிட்டல் திண்ணை:  முற்பட்ட சாதிகள் வாக்கு: பாஜக - அதிமுக  புதுத் திட்டம்!மின்னம்பலம்  : “தமிழகத்தில் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.தாமதத்துக்கு என்ன காரணம் என விசாரித்தோம். ‘காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழக தலைவரிடம் இருந்து ஒரு லிஸ்டை கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 20 பேரின் பட்டியல் டெல்லிக்குப் போயிருக்கிறது.
ஏற்கனவே தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தீவிரமான முயற்சிகள் நடத்தி வருவது தனி செய்தியாகவே மின்னம்பலத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடமும் இளங்கோவன் பேசியிருக்கிறார். அவரும் இளங்கோவனிடம் உறுதியாக செய்து தருவதாக சொல்லியிருக்கிறாராம். இது தொடர்பாக ப. சிதம்பரமும் கே.எஸ். அழகிரியிடம் பேசியுள்ளார். ‘இளங்கோவனுக்கு ஏற்ற ஒரு தொகுதியை ஒதுக்குங்கள்’ என்று அவரும் கூறியுள்ளதாகத் தகவல். இவ்வாறு
தமிழகத்தில் இருந்து பட்டியல் போனாலும் டெல்லி தனியாக ஒரு பட்டியல் வைத்திருக்கிறது. சி.இ.சி. எனப்படும் சென்ட்ரல் எலெக்‌ஷன் கமிட்டிக்குத்தான் வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. அந்த கமிட்டியில் சோனியா, ராகுல் உட்பட மொத்தம் 12 பேர் இருக்கிறார்கள். அந்த கமிட்டி இதுவரை கூடவே இல்லை.
கமிட்டியில் இருக்கும் எல்லோருமே டெல்லியில் இருப்பதால் எந்த நேரத்திலும், ராகுல் அழைத்தால் அந்த கமிட்டி கூடி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும். ஆனால், வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை எல்லாமே முன்கூட்டியே முடிவு செய்துவிட்டார்கள். பேருக்காக கமிட்டி கூட்டம் கூடி, அதற்கான ஒப்புதலை வழங்கும். இன்று இரவு அல்லது நாளை இரவு சி.இ.சி. கமிட்டி கூடலாம். அதன் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ‘ என்று சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்.
பிஜேபியை பொறுத்தவரை பார்லிமெண்ட் கமிட்டி என்ற அமைப்புதான். இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்குப் போனார் தமிழக தலைவர் தமிழிசை. அப்போது தமிழகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த, அதே நேரத்தில் அந்த தொகுதிக்கு தகுதியானவர்கள் என ஒரு பட்டியலை டெல்லியில் கொடுத்திருக்கிறார். பிஜேபியின் மற்ற தலைவர்களும் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் லிஸ்டை பார்லிமென்ட் கமிட்டியில் கொடுத்திருக்கிறார்கள். இன்று அந்த கமிட்டி கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். அப்படி கமிட்டி கூடினால் இன்று இரவு பிஜேபியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பதுதான் அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படும் தகவல். இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களின் மொத்த பட்டியலும் தயார் செய்ய வேண்டும் என்பதே தாமதத்துக்கான காரணம் என்று சொல்கிறார்கள் அந்தக் கட்சியில்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் தட்டியது.
“சிறுபான்மையின மக்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. அண்மையில் சர்வே ஒன்றை நடத்தியதில் சிறுபான்மையினர் வாக்குகளில் 3 சதவீதம் கூட, பிஜேபி கூட்டணிக்கு வராது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், முற்பட்ட வகுப்பு வாக்குகளை குறிவைப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பத்து சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் ஃபார்வர்டு கிளாஸ் எனப்படும் முற்பட்ட வகுப்பு மக்களின் ஆதரவை அறுவடை செய்யத் திட்டமிட்டுள்ளது பாஜக. அதிமுக சார்பில் தம்பிதுரை 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து மக்களவையில் கடுமையாகப் பேசினாலும், திமுகவைப் போல இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லை அதிமுக.
எனவே முற்பட்ட வகுப்பினரை குறிவைத்து பாஜக-அதிமுக தங்கள் ஆபரேஷனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், உளவுத் துறை மூலமாக முற்பட்ட வகுப்பில் இருக்கும் மக்கள் எவ்வளவு பேர் என்ற பட்டியல் எடுத்ததில், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு குறைந்தது 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வரை முற்பட்ட வகுப்பினருக்கு இருப்பதாக அந்த ரிப்போர்ட்டில் சொல்லி இருக்கிறார்கள். அந்த வாக்குகள் அப்படியே முழுமையாக வந்தால், சிறுபான்மையின வாக்குகள் பிரிவதை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் பாஜகவும், அதிமுகவும். தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முற்பட்ட வகுப்பு மக்களின் பட்டியலை விறு விறுவென தயார் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். அந்த பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களிடம் பிரச்சாரம் செய்யும் பணி தொடங்குமாம்.”

கருத்துகள் இல்லை: