வியாழன், 27 டிசம்பர், 2018

தோழர் நல்லகண்ணும் பூச்சி அல்ல ... போராட்ட களத்தில் புலி!

Shalin Maria Lawrence : தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று இரண்டு விஷயங்களை
சொல்லலாம்.
ஒன்று அரசியல் வரலாறு தெரியாதவர்கள் முழுநீள கட்டுரைகள் எழுதுவது.
இரண்டு ஒருவரை எளிமையானவர் என்று சொல்லிவிட்டால் அவர் நிச்சயம் வேலைக்காகாதவர் என்று கற்பனை செய்து கொள்ளுவது.
இரண்டாம் விஷயத்தை பற்றி பேசுவோம்.
பொதுவாக பொது சமூகம் ஒருவரை எளிமையானவர் என்று சொல்லும்போது அவரின் உடை முதலில் கருத்தில் வரும் ,இரண்டாவது அவரின் வாழ்வியல்.
அப்துல் கலாமும் எளிமையானவர்தான். தோழர் நல்லகண்ணும்
எளிமையானவர்தான்.
ஆக எளிமையானவர்கள் என்று மேல் சொன்ன காரணங்களுக்காக யாரை குறிப்பிட்டாலும் உடனே நம் ஆழ்மனது வேறு விதமாக யோசிக்க துவங்கும்.
அவர் எளிமையானவர் என்றால் காசு இருக்காது ,நேர்மையாக இருப்பார் ,ஊழல் செய்திருக்க மாட்டார் ,எல்லோரிடமும் நன்றாக பழகுவார் ,பாவம் மனிதர் ,பூச்சி.
இதுதான் எல்லோர் மனதிலும் தோன்றும் விஷயம்.
பூச்சி...ஒன்றுக்கும் உதவாதவர்.
எளிமையானவர் என்பதற்கு சமூகம் கொடுக்கும் இன்னொரு அர்த்தம் "வேலைக்கு ஆகாதவர்".
இங்கே தான் அப்துல் கலாமும் ,தோழர் நல்லகண்ணுவும் பொது புத்தியில் இருந்து மாறுபடுகின்றனர்.

ஆனால் வேறு வேறு வழியில்.
அப்துல் கலாம் எளிமையானவர் ஆனால் பூச்சி இல்லை.பாஜகவுக்கு உதவியாக சகல காரியங்களிலும் செய்த கெட்டிக்காரர்.
தோழர் நல்லகண்ணும் பூச்சி அல்ல மாறாக அவர் போராட்ட களத்தில் புலி.
அரசியல் தெரியாத அரை வேக்காடுகள் வேண்டுமானால் நல்லகண்ணு என்ன செய்தார் என்று கேட்டால் "அவர் நல்லவர் ,எளிமையானவர் ,ஊழல் இல்லாதவர் " என்று மட்டையாக பதில் சொல்லும்.
ஆனால் நல்லகண்ணு அவர்களை உலகம் விரும்பியதற்கு மிக மிக முக்கிய காரணம் அவரின் போராட்ட குணம் ,பங்கெடுத்த எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் அவரின் துணிச்சல்.
ஒரு காலத்தில் ஒரு சொல் இருந்தது.நல்லகண்ணு எந்த போராட்டத்தின் முன்னணியில் இருக்கிறாரோ அந்த போராட்டம் வெற்றி பெறும்.அதுவே அந்த சொல்.
அவரின் நிலம் சார்ந்த போராட்டங்கள் ,சூழலியல் போராட்டங்கள் ,வர்க்க போராட்டங்கள் நடுவில் அவர் மிக பெரிய சாதி ஒழிப்பு போராளியாக இருந்தார்.
வர்க்க வேறுபாட்டின் மூலம் ஜாதியிலிருப்பதை உணர்ந்த அவரின் பல போராட்டங்கள் ஜாதி ஒழிப்பையே முன்நிறுத்தின. இங்கே தான் அவர் ஒரு சிறந்த அம்பேத்கரியவாதியாக திகழ்கிறார்.
இந்திய சுதந்திர போராட்டம் ,விவசாயிகள் போராட்டம் என்று தீவிரமாக செயல்பட்ட அவரை ஜாதி ஒழிப்பின் வழி கைகளை பிடித்து இழுத்து சென்றது அவரின் திருமணம்.
ஜாதி ஒழிப்பு போராளியான அன்னச்சாமி அவர்கள் மகள் ரஞ்சிதத்தை மணம் முடித்தது அவர் வாழ்வில் நிகழ்ந்த மிக பெரிய திருப்பம்.
நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது.
இங்கே யார் வேண்டுமானாலும் ஊழலுக்கு எதிராக போராடலாம் ஆனால் சாதி ஒழிப்பு போராட்டங்கள் எல்லாம் சிலரால்தான் முடியும்.அந்த சிலரில் தோழர் நல்லகண்னு மிக முக்கியமானவர்.
சகாயம் IAS என்கிறவரோடு நல்லகண்ணு என்கிற சாதி ஒழிப்பு போராளியை ஒப்பிடுவதா ? அப்படி ஒப்பிட்டால் ஒப்பிடுபவருக்கு அரசியல் சமூக அறிவு கடுகளவு என்று அர்த்தம்.
குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார். இப்போது ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் போர்வையில் மணல் எடுக்கப்படுவதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்.
ஏன் இங்கே வடசென்னை கொடுங்கயுர் குப்பை கிடங்கை அகற்ற கோரி அவர்தான் குப்பை மேட்டில் நின்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்.
ஒன்று இரண்டு அல்ல.நூற்றுக்கணக்கான போராட்டங்கள்.அதுவும் அடையாள போராட்டங்கள் அல்ல.களத்தில் இறங்கி அடி, உதை ,சிறை, கொலை மிரட்டல் என பல இடையுறுகளுக்கு நடுவில் நடந்த போராட்டங்கள்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பல போராட்டங்கள் வெற்றி போராட்டங்கள்.
இந்த வயதிலேயே தட்டு தடுமாறியாவது போராட்ட களத்திற்கு வந்து நின்று விடுகிறார் என்றால் அவரின் இளம் வயது காலங்களை நினைத்து பாருங்கள்.
இங்கே என்ன பிரச்சனை என்றால் இங்கே இவையெல்லாம் பெரிதாக பரப்பபடவில்லை.
"அய்யா எளிமையானவர்" இந்த ஒற்றை வாக்கியத்தில் ஒரு நிஜ கள வீரனை மறைத்துவிட்டார்கள்.
அவர் பார்க்க கனிவாக இருக்கிறார் ,மெதுவாக பேசுகிறார் ,மெதுவாக நடக்கிறார் என்றால் அவர் எதுவும் செய்யவில்லை என்கிற அர்த்தம் கிடையாது. ஒரு கரும்சிறுத்தையின் நளினதோடு களமாடி இருக்கிறார் என்று அர்த்தம்.
நல்லகண்ணு அய்யா ஒன்றும் ஊடகங்களால் ஊதி பெரிதாக்க பட்ட பிம்பம் அல்ல கை வைத்தால் நொறுங்க.அவர் கள நிஜம்.
இனிமேல் நல்லகண்ணு அவர்களை பற்றி சொல்லும்போது அலட்டிக்கொள்ளாத கள வீரன் என்று அழைப்போம். இந்த எளிமையானவர் என்கிற சாதாரணமான அடைமொழி இனி வேண்டாம்.
இப்பொழுது மீண்டும் மேலே சொன்ன விஷயத்திற்கு வருகிறேன்.
அரசியல் தெரியவில்லை என்றால் பெரிய கட்டுரைகள் எழுத்தாதீர்கள் அன்பர்களே. மற்றும் ஊடகங்களில் இருந்துகொண்டு கட்சிகளின் PRO க்கலாக செயல்படாதீர்கள்.
மேலும் நமக்காக கண்ணுக்கு தெரியாமல் களத்தில் போராடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நம்மால் தேர்தல் வெற்றியை தான் கொடுக்க முடியவில்லை அவர்களை மனம் திறந்து வாழ்த்தவாவது செய்யலாம்.Ingratitude is non-dravidian.
இணைய கட்சி தொண்டர்கள் கவனத்திற்கு : தற்போது உங்களின் எதிரி மோடி தான் தோழர் நல்லக்கண்ணு அல்ல. You have dialled a wrong number.

கருத்துகள் இல்லை: