
- இதுகுறித்து பேசிய செல்வி, சட்ட ரீதியான நியாங்கள், கருத்தியல் நியாயங்கள், சமூக அற நியாயங்களோ இல்லாத அமைப்பினரின் குற்றச்சாட்டு என பதிலளித்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பால், ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து 11 பெண்கள் அடங்கிய குழு சபரிமலை வந்தது. அவர்கள் அனைவரையும் பம்பையில் பக்தர்கள் வழிமறித்தனர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீசார் பாதுகாப்பை நாடினர். பெண்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை போலீசார் கைது செய்தனர். மீண்டும் சபரிமலை நோக்கி புறப்பட்ட பெண்கள் குழுவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் கேரளா போலீசார் தமிழக பெண் குழுவினரை சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 11 பெண்களும் மாவோயிஸ்டுகள் என்றும் கேரளாவின் சட்டம் மற்றும் அமைதியை குலைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
சபரிமலைக்கு செல்வதற்காக பெண்களை ஒன்று திரட்டி இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்வதவர் மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி என்று தெரியவந்துள்ளது. இவர் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஐயப்பனை வழிபட பெண் பக்தர்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களுக்கு உதவிட செல்வி முடிவு செய்து சபரிமலைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்து வரும் அமைப்பு என்ற பெயரில் செயல்படும் மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செல்வி இருக்கிறார். இவர் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கி பிறகு அதை அவர் கலைத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் செல்வி வழக்கறிஞராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் அவர் செய்து வரும் தொழில் குறித்த தகவல்கள் உறுதியாக தெரியவில்லை. பெரியாரிய சிந்தனைகளின் படி செல்வி இயங்கி வருவதாகவும் அவருக்கு பல சுயமரியாதை இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அறியப்படுகிறது.
சபரிமலைக்கு செல்வதற்காக ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கடிதம் எழுதப்பட்டுள்ளது, அவர் அனுமதி அளித்த பிறகே மனித அமைப்பை சேர்ந்த பெண்களும், அவர்களுடன் சேர்ந்து மற்ற பெண் பக்தர்களும் சபரிமலைக்கு புறப்பட்டதாக செல்வி சில ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக செய்திகள் உள்ளன.
மேலும் போலீஸார் பேச்சளவிற்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கியதாகவும். காவல் அதிகாரிகள் நடைமுறையில் போராட்டக்காரர்களுக்கு பணிந்து தான் இருந்ததாகவும் செல்வி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அதை தொடர்ந்து தான் அவரும், அவர் சார்ந்துள்ள மனிதி அமைப்பும் மாவோயிஸ்ட் இயக்கம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்த குமார் என்பவர் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கும் ஒருவர் எதற்கான ஐயப்பன் பக்தர்கள் என்ற போர்வையில் சபரிமலைக்கு வரவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள செல்வி, தங்களுடன் வந்த பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கத்தான் நாங்கள் வந்தோம். ஆனால் இங்கே வந்தவுடன் நிலைமையே மாறிவிட்டது. தாலி தேவையில்லை என்று சொல்பவர்கள் கூட தாலி கட்டி அறுப்பது ஏன்…? அது ஒரு போராட்ட வடிவம் அல்லவா. அதுபோல் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும்போது அதை மீண்டெடுப்பதற்கான போராட்டம் இது. இப்போது எங்களது நோக்கம் நிறைவேறாமல் தமிழகம் திரும்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருநங்கைகள் கோயிலுக்குள் செல்லலாம் என சபரிமலை தேவஸம் போர்டு ஒப்புக்கொண்டது. மேலும் கோயில் நிர்வாகிகளும் திருநங்கைகள் மாதவிடாயிக்கு உள்ளாகமாட்டார்கள் என்பதால் அவர்களை அனுமதிக்க ஆட்சேபனையில்லை என்றனர்.
அதேபோல, அக்டோபரில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா என்பவர், ருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் இட்டு அவரது உடல்பாகங்கள் தெரியுமாறு ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். இது ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக