வியாழன், 27 டிசம்பர், 2018

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் முழு மூச்சில்?

மூன்றாவது அணி: கேசிஆர் பயணத்தில் ஸ்பீடு பிரேக்!
மின்னம்பலம்:  வர இருக்கிற 2019 நாடாளுமன்ற
மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ், தனி விமானம் அமர்த்தி நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் 23 ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 24 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு டெல்லி சென்ற கேசிஆர் இந்த வாரம் தான் சந்திப்பதாக இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ்வையும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதியையும் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
மம்தா பானர்ஜியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்பிய கேசிஆர் 25, 26 தேதிகளில் அகிலேஷ், மாயாவதி ஆகியோரை சந்திப்பதாகத் திட்டம் இருந்தது. நேற்று பிரதமர் மோடியை தெலங்கானாவின் புதிய முதல்வர் என்ற முறையில் சந்தித்து தனது மாநில நலன்கள் பற்றிய கோரிக்கையை முன் வைத்தார் கேசிஆர்.

டெல்லியில் இருப்பதாக முன்பு தெரிவித்திருந்த அகிலேஷ் யாதவ் தற்போது தான் லக்னோவில் இருப்பதாகவும், ஜனவரி 6 ஆம் தேதிக்குப் பின் தானே ஹைதராபாத் வந்து கேசிஆரை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “தெலங்கானா முதல்வரின் முயற்சியைப் பாராட்டுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ்வை சந்திக்கலாம் என்ற தெலங்கானா முதல்வரின் திட்டமும் டெல்லியில் நடக்கவில்லை. இதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியோ தெலங்கானா முதல்வரை சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என்று டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலின் முக்கியமான மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துவிட்டு தேர்தல் முடிவுகளுக்குப் பின் மூன்றாவது அணி பற்றி பேசிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள் என்றும் அதனாலேயே கேசிஆரின் சந்திப்புக்கு அவர்கள் அவசரப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.
தெலங்கானா முதல்வர் இன்று அல்லது நாளை ஹைதராபாத் திரும்புகிறார். மூன்றாவது அணி நோக்கிய அவரது பயணத்தில் டெல்லியில் ஒரு ஸ்பீடு பிரேக் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: