வெள்ளி, 28 டிசம்பர், 2018

நடிகை வனிதா விஜயகுமார் தகராறை ரஜனியும் எடப்பாடியும் பஞ்சாயத்து செய்து வைத்தனர்?

டிஜிட்டல் திண்ணை: நடிகை விவகாரம் - பஞ்சாயத்து செய்த எடப்பாடியும், ரஜினியும்!
மின்னம்பலம்:
“நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் தொடர்ந்து பிரச்னை நடந்து வரும் சூழ்நிலையில் காவல் நிலையம், நீதிமன்றம் என அப்பாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார் வனிதா. இந்த நிலையில்தான் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை வனிதா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அவரது
தந்தையும், நடிகருமான விஜயகுமாருக்கும், மதுரவாயல் போலீசாருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அனுபவத்தில் தலையிட தன் தந்தையும், நடிகருமான விஜயகுமாருக்கு தடை விதிக்க கோரி, நடிகை வனிதா , பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஜயகுமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை வனிதாவுக்கு எதிராக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் நடிகை வனிதாசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, வனிதா விஜயகுமார் வாதிட்டார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகர் விஜயகுமாருக்கும், மதுரவாயல் போலீசாருக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபக்கம் இருக்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கப் போயிருக்கிறார் வனிதா. முதல்வரின் உதவியாளர் வனிதாவிடம் பேசியிருக்கிறார். வனிதாவை உட்கார வைத்துவிட்டு, எடப்பாடிக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
சற்று நேரத்துக்குப் பிறகு முதல்வரின் உதவியாளர் வெளியே வந்து, ‘உங்க பிரச்னை எல்லாமே முதல்வருக்கு தெரியும். உங்க அப்பாவும் முதல்வரை பார்க்க முயற்சி செய்தாரு. ஆனால், இது குடும்ப பிரச்னை என்பதால் முதல்வர் அவரை சந்திக்க மறுத்துட்டாரு. உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை செஞ்சு கொடுக்க சொல்லி கமிஷனருக்கு சொல்லிட்டாரு. இனி போலீஸால உங்களுக்கு தொந்தரவு வராது. நீங்க பேசி முடிச்சுக்கோங்க... உடனே போய் நீங்க கமிஷனரை பாருங்க.. சி.எம். கமிஷனர்கிட்ட பேசிட்டாரு.’ என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு கமிஷனரையும் போய்ப் பார்த்திருக்கிறார் வனிதா.
இது மட்டுமல்ல, விஜயகுமார் குடும்பத்துக்கும் ரஜினிக்கும் நெருக்கமான நட்பு உண்டு. அதனால், லதா ரஜினியிடம் பேசி, இந்த விஷயங்களை எல்லாம் ரஜினியின் கவனத்துக்கும் கொண்டு போயிருக்கிறார் வனிதா. ’நான் விஜயகுமாரிடம் பேசுறேன்’ என்று ரஜினியும் சொல்லியிருக்கிறார். விஜயகுமாரைத் தொடர்புகொண்டு ரஜினியும் பேசினாராம். ‘குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். அதை பொது வெளியில் கொண்டு வருவது நல்லதில்ல. என்னதான் இருந்தாலும் வனிதாவும் உங்க பொண்ணுதானே... பிரச்னை இல்லாமல் பார்த்து முடிச்சுக்கோங்க...’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
விஜயகுமாரோ, ‘இது நான் மட்டும் முடிவு எடுக்கிற பிரச்னை இல்லை. அருணையும் கேட்கணும்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு அவதான் போனா... மீடியாவுல என்னை பத்தி அவதான் அசிங்கமா பேசிட்டு இருக்கா. நான் இதுவரைக்கும் வாயே திறக்காமல்தான் இருக்கேன்...’ என்று சொன்னாராம்.
‘நம்ம புள்ளைதானே பார்த்து பேசி முடிங்க விஜி..’என்று சொன்னாராம் ரஜினி. எடப்பாடி தரப்பிலிருந்தும் விஜயகுமாருக்கு இதே அட்வைஸ் கொடுத்ததாக சொல்கிறார்கள்.
முதல்வர், ரஜினி என எல்லோரும் தலையிட்டும் அப்பா- மகள் பிரச்னை ஓயுமா தொடருமா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது. ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: