திங்கள், 10 செப்டம்பர், 2018

இந்தியர்கள் அமெரிக்காவுக்கும் சாதியை கொண்டு வந்துவிட்டனர்’ : ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கண்டனம்…!

theekkathir.i நியூயார்க்: ‘சந்நியாசி போனாலும் சாதிப்புத்தி போகாது’ என்று  சொலவடை உண்டு. அதாவது, அனைத்தையும் துறந்து சாமியாராக போவோரும் சாதியை மட்டும் துறப்பதில்லை என்பதாக இந்த சொலவடையை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்திய சமூகம் சாதியச் சமூகமாக இருக்கிறது.
இந்தியர்கள் எங்கே சென்றாலும் சாதியையும் தூக்கிக் கொண்டே சென்றுவிடுவார்கள். பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலும், தங்களின் சாதிய பகுமானத்தை அவர்கள் விடுவதில்லை. சொந்த வீடே இல்லாவிட்டாலும் அக்ரஹாரம் வந்து விடும். அங்கு மற்றவர்கள் வரக்கூடாது என்று உத்தரவும் போடப்பட்டு, சேரிகளும் ஏற்படுத்தப்பட்டு விடும்.இதன்மீதுதான் அமெரிக்கர்கள் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். சாதிபேதம் கடைப்பிடிக்கும் இந்துக்கள், அதனை தங்கள் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து, பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக அவர்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுத் துவங்கியுள்ளன.
கென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த சாதி’ என்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் சாதியைக் கடைபிடிக்கிறார்கள் என்று புள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கொளோகக் கொண்டு இந்த கட்டுரையை அவர் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் 3-இல் இரண்டு பட்டியலின சாதியினர் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்; ஏனைய சாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும் கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் சாதி இந்துக்கள், சாதியை- தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார்.
நிறவேற்றுமை பிரச்சனையில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைபிடிக்கும் “பாஸ்ஸிங் (passing)” என்று அழைக்கப்படும், மறைந்து வாழும் முறையையே, இங்கு வசிக்கும் பட்டியலின மக்களும் கடைப்பிடிக்கின்றனர்: அதாவது, சாதி இந்துக்களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் சாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் உள்ள பட்டியலின மக்கள், சாதி இந்துக்களை விட அதிகம் படித்து இருந்தாலும்கூட ஒடுக்கமுறைக்கு தப்பமுடியவில்லை என்கிறார். ஒப்பீட்டளவில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் சாதி இந்துக்களை விட, பட்டியலின மக்கள் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறும் கென்னத் ஜே கூப்பர், இதுதான் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலும் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்து வந்தனர்.அதைத் தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பது போல இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கச் சட்டத்தில் சாதியப் பாரபட்சம் குறித்தான வரையறையோ, அதற்கு எதிரான சட்டங்களோ இல்லை.ஆனால், இந்தியர்கள் தங்களின் சாதியப் பாகுபாட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு வந்துள்ளதால், அமெரிக்காவிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தின் அவசியத்தை இக்கட்டுரை மூலம் கென்னத் ஜே கூப்பர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: