
மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் தன்னை இணைக்க வற்புறுத்தி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் கட்சி மேலிடம் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மறுத்து வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மு.க.அழகிரியை பாராட்டி பேசினார். மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரியின் தேர்தல் வியூகம் சிறப்பாக இருந்தது என்றும், அவர் தி.மு.க. தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்றும் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த அமைதி பேரணியை மு.க.அழகிரி சிறப்பாக நடத்தியதாகவும் செல்லூர் ராஜூ பாராட்டியது மு.க. அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அமைச்சரை நேரில் சந்திக்க மு.க. அழகிரி முடிவு செய்தார். இந்த தகவல் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு மு.க.அழகிரி சென்றார். வாசலில் நின்று அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் மு.க.அழகிரியை வரவேற்றனர்.
பின்னர் வீட்டில் அருகருகே அமர்ந்து இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த மு.க.அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார்
மரணம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல்
தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
மு.க.அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் கவுஸ்பாட்சா, மன்னன், முபாரக்மந்திரி, சின்னான், கோபிநாதன், உதயகுமார். எம்.எல்.ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக