செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: பிறழ்சாட்சி ஆனார் ஸ்வாதி!; அரசுத்தரப்பு அப்செட்!!

go/nakkheeran.in - elayaraja" பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10, 2018) ஆஜரான முக்கிய சாட்சியான இளம்பெண் ஸ்வாதி, திடீரென்று பிறழ் சாட்சியம் அளித்தார். இதனால், அரசுத்தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் & சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பியவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.

ஆரம்பத்தில் திருச்செங்கோடு போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கோகுல்ராஜ் பி.இ., படித்து வந்ததும், அவர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதமே படிப்பை முடித்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஸ்வாதி என்ற மாணவியும் அவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.


கல்லூரி படிப்பை முடித்தபிறகும் அவர்களுக்குள் நட்பு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜூம், ஸ்வாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. அப்போது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட 7 பேர், மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்த இருவரையும் மிரட்டியதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் ஒரு வெள்ளை நிற டாடா சஃபாரி காரில் கடத்திச்சென்றதும் தெரிய வந்தது.

நாராயணன்
ன்
இந்த சம்பவத்திற்குப் பிறகே கோகுல்ராஜ், ரயில் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாதியும் காதலிப்பதாக கருதிய யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

அடுமட்டுமின்றி, அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் யுவராஜ் உள்ளிட்ட கூட்டாளிகள் கோகுல்ராஜை கடத்திச்செல்வதும், ஸ்வாதியை மிரட்டிய காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ ஃபுட்ஜேஜூகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக போலீசார் சேர்த்தனர்.

இதன்பிறகே, யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வழக்கில் சாட்சி விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 30.8.2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் விசாரணை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் கொல்லப்பட்ட ஜோதிமணி, தலைமறைவாகிவிட்ட அமுதரசு தவிர மற்ற 15 பேரும் ஆஜராகி வருகின்றனர்.

வழக்கில் அரசுத்தரப்பில் முதல் சாட்சியான கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இரண்டாம் சாட்சியான ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ்சந்த் மீனா, மூன்றாவது சாட்சி கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன் ஆகியோரிடம் ஏற்கனவே விசாணை, குறுக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், கோகுல்ராஜை கடைசியாக சந்தித்ததாக கூறப்படுபவரும், அவருடைய நெருங்கிய தோழியும், யுவராஜ் உள்ளிட்ட கும்பல் கடத்திச்சென்றதை நேரில் பார்த்தவராக கருதப்படும் ஒரே முக்கிய சாட்சியான ஸ்வாதி இன்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

பாதுகாப்பு கருதி, அவரிடம் திரை மறைவு (இன் கேமரா) விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், சிபிசிஐடி போலீசார் ஆகியோரைத் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் விசாரணையை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்றத்திற்கு, ஸ்வாதி, கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிற பேண்ட், ஆரஞ்ச் நிற டாப்ஸ் மற்றும் அதே நிறத்தில் துப்பட்டாவும் அணிந்து வந்திருந்தார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை துப்பட்டாவில் மூடியபடி நீதிமன்றத்திற்குள் பெற்றோர், உறவினர்கள் சகிதமாக வந்தார்.

அவரிடம் காலை 12.30 மணியளவில் விசாரணை தொடங்கியது. முதலில், சம்பவத்தன்று அர்த்தாரீஸ்வரர் கோயில் மலையடிவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை, ஒரு புரஜக்டர் மூலம் சுவரில் ஓடவிட்டுக் காட்டப்பட்டது. சாட்சி கூண்டுக்கு அருகில் உள்ள சுவரில் இந்தக் காட்சிகள் ஓடவிடப்பட்டன.

கேமரா&1, கேமரா&5 ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் மூன்று நிமிட வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. அதில் ஸ்வாதி, கோகுல்ராஜ் ஆகியோரின் முகங்களும், அவர்களிடம் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் பேச்சுக்கொடுப்பதும், கோகுல்ராஜை அழைத்துச் செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த ஸ்வாதி, அதில் இருப்பது தன்னுடைய உருவம் அல்ல என்று அதிரடியாக சாட்சியம் அளித்தார்.

ஏற்கனவே திருச்செங்கோடு மற்றும் சிபிசிஐடி விசாரணைகளின்போது வீடியோவில் பதிவாகி இருப்பது தானும், கோகுல்ராஜூம்தான் என்றதுடன், யுவராஜ் உள்ளிட்ட கும்பலையும் அடையாளம் காட்டி வாக்குமூலம் அளித்திருந்த ஸ்வாதி திடீரென்று வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவமே அல்ல என்றும், அந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் மற்றவர்கள் யார் என்றும் தெரியாது எனவும் சாட்சியம் அளித்தார்.

எல்லாவற்றுக்கும் மேல், கோகுல்ராஜை யார் என்று தெரியுமா என்ற அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு, அவர் நான் படித்த கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால் அவர் யாரென்று தனக்குத் தெரியாது என்று சாட்சியம் அளித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும், சிபிசிஐடி போலீசாரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இன் கேமரா விசாரணை மதியம் 1.15 மணியளவில் முடிந்தது. அதன்பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது. முன்னதாக, கோகுல்ராஜை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை நிற டாடா சபாரி கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரை பார்த்து அடையாளம் சொல்லும்படி கேட்டதற்கு, ஸ்வாதி அதுபற்றி தனக்கு தெரியாது என்று பதில் அளித்தார்.

இதையடுத்து, மதியம் 2.50 மணிக்கு மீண்டும் ஸ்வாதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது 'இன் கேமரா' முறை விலக்கிக் கொள்ளப்பட்டு, திறந்தவெளியில் விசாரணை நடந்தது.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலையில், அவருக்கு உதவியாக அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் சேலம் நாராயணன் ஸ்வாதியிடம் பல கேள்விகளைக் கேட்டார்.

குறிப்பாக, கோகுல்ராஜூடன் நீங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றீர்களா? என்று கேட்டதற்கு ஸ்வாதி, நான் கோயிலுக்கு போகவே இல்லை என்று பதில் அளித்தார். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து, உங்களிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டாரா? என்று கேட்டதற்கு தெரியாது என்று பதில் அளித்தார்.

கருணாநிதி

ka
சம்பவ தினத்திற்கு முதல் நாள் அதாவது 22.6.2015ம் தேதி, கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தார். அவர் போன் நம்பர் இவைதானா என்று இரண்டு நம்பர்களைச் சொன்னார். அதற்கும் அவர் தெரியாது என்றே பதில் சொன்னார். கோகுல்ராஜூம், நீங்களும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டீர்கள் என்றதற்கு, நான் கோயிலுக்கு போகவில்லை என்றார் ஸ்வாதி.

உங்களிடம் யுவராஜ் அனுப்பியதாக ஒருவர் வந்து, இந்த வழக்கில் யுவராஜை அடையாளம் காட்டிக்கொடுக்க வேண்டாம். அவர் ஜாதியைச் சேர்ந்த நீங்கள் அவரை காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் லஞ்சமாக தரத்தயாராக இருக்கிறோம் என்றதற்கு, கோகுல்ராஜ் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் அவரை அடையாளம் காட்டுவேன் என்று சொன்னீர்கள். அதற்கு அந்த நபர், அப்படி என்றால் உன்னையும், உன் தங்கை, உன் தாய், தந்தை ஆகியோரையும் கோகுல்ராஜை அனுப்பிய இடத்திற்கே அனுப்பி விடுவோம் என்று மிரட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள் என்று வழக்கறிஞர் நாராயணன் கேட்டார். அதற்கு ஸ்வாதி, தெரியாது என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.

ஸ்வாதியின் கையெழுத்து குறித்து ஒரு தாளைக் காட்டி வழக்கறிஞர் கேட்டார். அந்தத் தாளில் இருப்பது தன்னுடைய கையெழுத்துதான் என்று ஒப்புக்கொண்டார். இதேபோன்ற மற்றொரு கேள்விக்கு கையெழுத்து தன்னுடையது இல்லை என்று முரணாக பதில் அளித்தார்.

ஏறக்குறையாக 99 சதவீத கேள்விகளுக்கு, முக்கிய சாட்சியான ஸ்வாதி, 'நான் கோயிலுக்குப் போகவில்லை', 'தெரியாது', 'இல்லை' என்றே பதில் சொன்னார். சாட்சி விசாரணை இன்று மாலை 5 மணிக்கு முடிந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் சாட்சி விசாரணை செப்டம்பர் 18, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ், திருச்சி மத்திய சிறைக்கும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: