சனி, 15 செப்டம்பர், 2018

டி ஆர் பாலு திமுகவின் முதன்மை செயலாளராகினார் ..


மின்னம்பலம் :"ஆகஸ்ட் 21ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை நினைவில்
இருக்கிறதா?
‘துரைமுருகன் தற்போது முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அது துரைமுருகனுக்காக உருவாக்கப்பட்டதுதான். எப்படிச் செயல் தலைவர் என்ற நிலைக்கு ஸ்டாலினுக்குப் பிறகு யாரும் கிடையாதோ அதேபோல முதன்மைச் செயலாளர் பதவியையும் அப்படியே விட்டுவிடலாம் என்பதுதான் முதலில் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பதவியை டி.ஆர்.பாலுவுக்குக் கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடந்துவருகிறது.
‘எல்லோரையும் சமாதானப்படுத்தி அரவணைத்துப் போயிடலாம். எந்தச் சிக்கலும் கட்சிக்குள் வரக் கூடாது...’ என்று ஸ்டாலின் சொல்லிவருவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறார்.'' இதுதான் அன்று மின்னம்பலம்  சொன்னது. அது இன்று நடந்திருக்கிறது.

கலைஞர் நினைவிடத்தில் டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்திய பிறகு, '1974ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சென்னை மாவட்டத்தின் துணைச் செயலாளராகவும் 1976க்கு பிறகு அதே மாவட்டத்தின் செயலாளராகவும் ஏறத்தாழ 11 ஆண்டுக் காலம் பணியாற்றிய எனக்கு இன்று இந்தப் பொறுப்பைத் தலைவர் ஸ்டாலின் தற்போது வழங்கியுள்ளார். கலைஞர் எனக்கு எண்ணற்ற பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். ஆனால், தலைவர் ஸ்டாலின்தான் எனக்குக் களத்தில் பயிற்சியைக் கொடுத்தார். இந்த மாபெரும் இயக்கத்தை ஒருங்கிணைக்க எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளனர். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோது நான் எப்படி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவந்தேனோ அதே போல் இன்றும் நான் பணியாற்ற எனக்கு ஸ்டாலின் பயிற்சி அளிப்பார். இந்தப் பொறுப்பை நிறைவேற்றி, தலைவர் ஸ்டாலின் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்' என்று உருகினார் டி.ஆர்.பாலு.
இந்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கு இப்போது துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி, திருச்சி மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகளாக இருக்கும் கே.என். நேரு ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வந்தன. ஸ்டாலினோடு நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலுவின் பெயர்கூடக் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால் ஸ்டாலின் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து டி.ஆர். பாலுவை டிக் செய்திருக்கிறார் . கலைஞரும் இதேபோன்ற நிலைகளில் சீனியாரிட்டிக்குதான் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறார். அவரது அருகே இருந்து பாடம் கற்ற ஸ்டாலினும் சீனியாரிட்டிக்கே முக்கியத்துவம் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அந்த வகையில்தான் 74 முதல் கட்சியில் மாவட்டப் பொறுப்பில் இருந்து வரும் டி.ஆர்.பாலுவுக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.
அதே நேரம் பொறுப்புகளை எதிர்பார்த்திருக்கும் தனக்கு சின்சியரானவர்களையும் ஸ்டாலின் விட்டுவிடுவதாக இல்லை. முப்பெரும் விழாவுக்குப் பிறகு கட்சியின் அமைப்புச் செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் ஸ்டாலினிடம் இருக்கிறது. அந்தப் பதவிகளில் சீனியர்களை மட்டுமல்லாமல் தனக்கு சின்சியராக இருப்பவர்களையும் நியமிக்கும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்" என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்

கருத்துகள் இல்லை: