ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

சென்னை மெட்ரோ இந்தி அகற்றப்படுகிறது!


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துக்கு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. 80 ஆண்டுகள் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படாது; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1937ஆம் ஆண்டில் இந்தி மொழி கட்டாயம் என்று பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்கள் அறிவித்தபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள்தான். 1937 - 38, 1963 - 65 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்தான் மிகப்பெரிய போராட்டங்களாக இருந்தன. இந்தப் போராட்டங்களின் விளைவால்தான் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோதெல்லாம், மற்ற மாநிலத்தவர்கள் ஏன் இவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று தமிழகத்தை விநோதமாகப் பார்த்தார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வு நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன மாற்றம் தற்போது தமிழகத்தைவிட கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு குரல் பலமாக ஒலிக்கிறது. இந்த மாநிலத்தவர்கள் இந்தி மொழியால் தங்கள் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தொடங்கப்பட்ட நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இந்தி, ஆங்கிலம், அதற்கு அடுத்து கன்னட மொழி இடம்பெற்றதைப் பார்த்து கொதித்துப்போன, கன்னட ரட்சின வேதிகே, கன்னட பிரகாசிகா உள்ளிட்ட கன்னட அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இதனால், பெங்களூருவின் நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்தி மொழியை விலக்குவதாக அறிவித்தது.
கர்நாடகாவில் புதிதாக உருவெடுத்த இந்தி எதிர்ப்பு குரலுக்கே மெட்ரோ ரயில் நிர்வாகம் அடிபணிந்தது. இதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்பில் 80 ஆண்டு வரலாறு கொண்ட தமிழகத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மொழி இடம் பெற்றிருப்பதை எதிர்த்தும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மும்மொழி கொள்கையை பின்பற்றும் திட்டம் இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: