செவ்வாய், 20 ஜூன், 2017

அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் அல்லது மீரா குமார் எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர்?

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட்டுள்ள ராம்நாத் கோவிந்தை எதிர்த்து டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகள் நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது. ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 17-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக வேட்பாளர் தேர்வு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அமித் ஷா அறிவித்தார். அவர் தலித் சமூகத்தினரை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளராக உள்ளதால் அவரை ஆதரிக்க ஒருமித்த கருத்து ஏற்படாது என்று தெரிகிறது. பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து தலித் வேட்பாளர் ஒருவரையே களமிறக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதன்படி டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அல்லது முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் பிரகாஷ் அம்பேத்கரே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளார். பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தின் பெயர் தேர்வு செய்யப்பட்டத்தை தொடர்ந்து நிதீஷ்குமாரும், நவீன் பட்நாயக்கும் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவர்கள் இருவரும் கோவிந்துக்கு ஆதரவளிக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடிதான். பாஜக நிறுத்திய வேட்பாளரை ஆதரிப்பது குறித்து இதுவரை சிவசேனை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரகாஷ் அம்பேத்கரை வேட்பாளராக நிறுத்தினால் சிவசேனையின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன. கடந்த 1954-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி பிறந்தவர் பிரகாஷ். இவர் அம்பேத்கரின் பேரன். மகாராஷ்டிரத்தில் உள்ள பரிபுர பகுஜன் மகாசங்கம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அகோலா லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இளைய சகோதரர் ஆனந்தராஜ் அம்பேத்கரும் அரசியல்வாதி ஆவார். tamiloneindia

கருத்துகள் இல்லை: