வெள்ளி, 23 ஜூன், 2017

"ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்">1

ராம் நாத் கோவிந்து, தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார்.
வினவு : பிரதமர் மோடியுடன் ராம்நாத் கோவிந். பீகாரின் ஆளுநர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 20-ம் தேதியன்று இராஜினாமா செய்த ராம்நாத் கோவிந்தின் தற்போதைய அடையாளம், “இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக-வால் முன் நிறுத்தப்பட்டுள்ள ‘தலித்’ வேட்பாளர்” என்பது தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்களை பாஜக தொடர்ந்து நிகழ்த்தியுள்ளது. உனா தாக்குதல், ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை மற்றும் ரோகித் வெமுலா ‘கொலை’ ஆகியவையே இதற்குச் சான்று.
இப்பேற்பட்ட சங்கபரிவாரக் கும்பல், தனது தலித் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள, தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.-சின் பல்வேறு பிரிவுகளில் பல ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கும் இராம்நாத் கோவிந்தை களமிறக்கியுள்ளது.
மத்திய அரசுக்கு சொம்படிக்கும் ஊடகங்களோ கோவிந்தின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அவரை அப்பழுக்கற்றவர் என்றும் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்றும் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டின. ஆனால், நரகலில் விழுந்த நாட்டுச் சர்க்கரையில் அப்பழுக்கற்றது என ஏதேனும் இருக்க முடியுமா என்ன?
இராம்நாத் கோவிந்து, கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலை அப்படியேப் பேசியுள்ளார்.
அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டில், இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்தது.
இந்த்பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து 2010-ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில், பாஜகவின் தேசிய பேச்சாளராக இருந்த ராம்நாத் கோவிந்து, இசுலாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினரில் சேர்ப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என்று கூறினார். சீக்கிய மற்றும் புத்த மதத்தினைச் சேர்ந்த தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினராக ஏற்றுக் கொள்ளும் பொழுது, கிறிஸ்தவ, இசுலாமிய மதத்தைச் சேர்ந்த தலித்துக்களை ஏன் தாழ்த்தப்பட்ட சாதியினராக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் இசுலாமும், கிறிஸ்தவமும் இத்தேசத்திற்கு அந்நியமானவை என்று கூறினார். மேலும் அவ்வாறு இசுலாமிய, கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியனராக அங்கீகரிப்பது, பல தலித்துகள் மதம் மாறுவதற்கும், அந்த வகையில் இந்திய சமூகத்தின் வடிவமைப்பையே அது அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
அதாவது, சாதியக் கட்டுமானம் என்ற பார்ப்பனிய இந்து சமூகத்தின் நுகத்தடியிலிருந்து தப்பிப் பிழைத்து வேறொரு மதத்திற்கு எந்த ஒரு ’இந்து தலித்’தும் சென்று விடாமல் தடுத்துப் பாதுகாப்பதற்குத் தான் இந்த வருங்கால ‘தலித்’ இரப்பர் ஸ்டாம்ப் அன்றே குரல் கொடுத்துள்ளார்.
உள்நாட்டு மீடியாக்களில் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராகப் பேசிய ராம் நாத் கோவிந்து, அதற்கு முன்னதாகவே தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார். அது சமீபத்தில் விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அம்பலமான அமெரிக்கத் தூதரக தகவல் தொடர்பு ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 200-5ம் ஆண்டு அமெரிக்க தூதரகங்களுக்கிடையில் நடந்த தகவல் தொடர்பு ஆவணங்களில் ஒரு ஆவணம் தான் ”இந்திய தலித்துகளின் சமூக பொருளாதார நிலை இன்னமும் இருளிலேயே உள்ளது” என்ற ஆவணம். இதில் ராம்நாத் கோவிந்து, தொரட் கமிட்டியின் தலைவர் தொரட், மற்றும் அப்போதைய தனி தலித் கட்சியின் தலைவர் உதித்ராஜ் (இவர் தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்) ஆகியோரிடம் இந்தியாவில் தலித்துகளின் நிலைமைகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது.
தலித்துகள் மீது வெளிப்படையாக நடத்தப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்துக் கூறுகையில், எஸ்.கே. தொரட் அவர்கள், இந்தியாவின் புள்ளிவிவரக் கணக்குகளின் அடிப்படையில், இந்தியாவில் வெளிப்படையான சாதியத் தீண்டாமை அனைத்துத் தளங்களிலும் அதிக அளவில் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். பெருச்சாளி கோவிந்தோ, இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை வெகுவாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், வீடு கொடுப்பதில் மட்டும் தான் தீண்டாமை வெளிப்படையாக இருப்பதாகவும், பணியில் சேருவது போன்றவற்றில் சாதிய பாரபட்சம் முந்தைய பத்தாண்டுகளாக குறைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் வெறுமனே 5% தலித்துகள் மட்டும் தான் பலனடைகிறார்கள் என்று தொரட் கூறியிருக்கிறார். மேலும், மற்ற தலித்துகள் இந்தியாவில் கீழ்நிலை வேலைகளுக்கு மட்டுமே அவர்களது சாதிய அடையாளத்தால் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் கோவிந்தோ, இந்திய தலித்துகள் இட ஒதுக்கீடு மூலமாக பெரும்பான்மையாக பலன் பெற்று வருவதாகவும், சாதிய வேற்றுமையைப் போக்க ஆரம்பக் கல்வியில் இருந்து பயிற்றுவித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே பாரபட்சம் பார்ப்பதற்கான அடிப்படை பொருளாதார நிலைகளில் தான் இருப்பதாகவும், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை ஒடுக்க சாதியக் கட்டுமானத்தைப் பெயரளவில் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை விட வக்கிரமாக மற்றொரு வாதத்தையும் முன் வைத்திருக்கிறார். ஐரோப்பாவில் தொழிற்கழகங்கள் (கில்டுகள்) உருவானதைப் போல இந்தியாவில் இன்னார் இன்ன தொழிலைச் செய்து கொள்ளலாம் என உருவாக்கப்பட்ட அமைப்பு தான் சாதிய கட்டமைப்பு என்றும், அவரவர் தங்களது தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதைத்தான் குருமூர்த்தி, துக்ளக் சோ முதல் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வரை எப்போதும் கூறுகின்றனர்.
இதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் ஒரு உண்மையையும் போட்டுடைக்கிறார் கோவிந்து. சாதியத்தை இந்தியாவை விட்டு ஒழிக்க முடியாதா என்ற கேள்விக்கு, “இந்து மதம் சாதியை ஏற்றுக் கொண்டு அனுமதிப்பதால், இந்தியாவில் சாதியை அவ்வளவு எளிதாக ஒழித்து விட முடியாது, அது மறைய குறைந்தது 100 ஆண்டுகள் ஆகலாம்” என்று பதிலளித்திருக்கிறார்.
இதைத் தான் அம்பேத்கர் சொன்னார், “இந்து மதத்தை ஒழித்துக்கட்டாமல் சாதியை ஒழிக்க முடியாது” என்று.
செய்தி ஆதாரம்:
  • BJP’s Presidential Candidate Once Said ‘Islam And Christianity Are Alien To The Nation’
  • From WikiLeaks, a Glimpse Into Ram Nath Kovind’s Views on Discrimination Against Dalits

கருத்துகள் இல்லை: