வியாழன், 22 ஜூன், 2017

ஜெயலலிதா எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா எடப்பாடி அரசு ஆதரவு ..

புதுடில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடும்
எதிர்ப்பு  தெரிவித்த அணைகள்
பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது. 5,300 அணைகள் மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் உள்ள, 5,300 அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், நிர்வகிக்கவும் இந்த சட்டம் உதவும். ஆனால், அப்போது அந்த முயற்சி எடுபடவில்லை. அதன் பிறகு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இது குறித்த வரைவு மசோதா மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:
அணைகள் பாதுகாப்பை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்படும் சட்டம், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். அணைகள் பாதுகாப்புக்கு தேசிய அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது எந்த ஒரு பயனையும் அளிக்காது. ஒரு மாநிலத்திற்கு சொந்தமான ஒரு அணை, அண்டை மாநிலத்தில் இருக்கும் போது, அதை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஒப்பந்தகள் குறித்து இந்த புதிய மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை.


முல்லை பெரியாறு அணை

அண்டை மாநிலத்தில் உள்ள தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கக்கடவு, பெருவாரி பள்ளம் ஆகிய அணைகளுக்கு இதுபோன்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த உரிமையை ரத்து செய்யும் அளவிற்கு புதிய சட்ட மசோதா உள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஜெ., எதிர்த்த இந்த சட்ட மசோதாவிற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அமைச்சகத்தின் செயலாளர் அமர்ஜித் சிங் கூறுகையில், '' இந்த மசோதாவை இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்ல உள்ளோம். அடுத்த மாதம் துவக்கும் பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம்,'' என்றார்.

மத்திய அரசு கூறுவது என்ன?

தமிழக அரசு எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, '' தமிழக எதிர்ப்பு என்பது முல்லை பெரியாறு அணை தொடர்பானது மட்டும் தான். அந்த அணையின் உரிமை கேரளாவிற்கு செல்வதை தமிழகம் விரும்பவில்லை. இதற்காக அவர்களுக்கு நாங்கள் ஒரு யோசனை கூறியுள்ளோம். அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே அணைகள் தொடர்பாக பிரச்னை இருந்தால், அந்த அணைகளை, மத்திய நீர்வள கமிஷன் அதிகாரிகள் மேற்பார்வையிடுவர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: