ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சீனாவின் பட்டுப்பாதை: கில்ஜித்தில் பதற்றம்!


பாகிஸ்தான் வழியாக ஐரோப்பாவுக்கு சூப்பர் நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியா உரிமை கோரும் பகுதிகள் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
சீனாவின் ஜின்ஜி யாங் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் குவேதாரில் சீன உதவியுடன் கட்டப்பட்டு வரும் துறைமுகம் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. மேலும், இந்த நெடுஞ்சாலை சர்ச்சைக்குரிய கில்ஜித் (பலுசிஸ்தான் மாகாணம்) பகுதி வழியாகவும் செல்கிறது. இப்பகுதி தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இதன் பெரும்பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது ஆகும். இதனை மிக நீண்டகாலமாக இந்தியா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்திவரும் பாகிஸ்தான், ஏற்கெனவே பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் சிறிய பகுதியைச் சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது.

இப்போது இந்தியா உரிமை கோரும் கில்ஜித் பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கில்ஜித் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சீன சூப்பர் நெடுஞ்சாலை பாகிஸ்தானின் குவேதார் துறைமுகத்துடன் இணைக்கப்படுவதால் அரபிக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா முயற்சிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில் சீனா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதாரப்பாதை திட்டத்தை (சூப்பர் நெடுஞ்சாலைத் திட்டத்தை) எதிர்த்து கில்ஜித் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அங்கு கடும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும் பாகிஸ்தான் ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருகிறது. கில்ஜித் பகுதியின் மூத்த அரசியல்வாதியான பாபா ஜன்னையும் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராடும் இளைஞர்களுக்கு எதிராகவும் அரசியல் தலைவராக முன்னெடுப்பவர்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல் செயல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.minnambalam.com

கருத்துகள் இல்லை: