செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

ஜல்லிகட்டு ஆபத்தான விளையாட்டு .. மேனகா காந்தி சென்னையில் அதிரடி!


ஆலந்தூர், ஜல்லிக்கட்டு போட்டி ஆபத்தான விளையாட்டு என மத்திய மந்திரி மேனகா காந்தி கூறினார். மேனகா காந்தி பேட்டி: மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:– பெண்களுக்கு மகப்பேறுகால விடுப்பு தொடர்பான மசோதா மேல்–சபையில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. மேலும் ஒரு நாள் பாராளுமன்றம் நீடிக்கப்பட்டு இருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்கலாம். குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறும். யானைகள் இறப்பு: நாட்டில் யானைகள் இறப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது நாட்டில் 20 ஆயிரம் யானைகள் தான் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. தமிழ்நாடு, அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி ரெயில்களில் அடிபட்டு இறக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு யானை இப்படி இறப்பதாக தகவல். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.


வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ரெயில்களின் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்கள் அழிந்துவிட்டன. இதனால் யானைகள் வழிதவறிச் சென்று சிக்கி இறந்துவிடுகின்றன. வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்களை மத்திய–மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு நடத்த தடை அமலில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தான். அதேநேரம் அபாயகரமான, ஆபத்தான ஒரு விளையாட்டு.

தமிழகத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் திறமைமிக்க அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. அதை செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வதை அவர்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை: