செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

ஆணவ நோயும் இன்னபிற நோய்களும் கொஞ்சமும் குறையாத இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்


இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நட்பும் பாசமுமாக பொங்கி வழிந்திருக்கிறார். அதை தலைப்பு செய்தியில் போட்டு கொண்டாடுகிறது சில பத்திரிகைகள். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலே சொல்லாமல் அலட்சியப்படுத்துவார் அல்லது கடுமையான குரலில் பதில் சொல்வார். இந்த முறை கடுமை போய், நெளிவு சுளிவு வந்திருக்கிறது. காரணம், எதிர்க்கட்சியின் பலம்.

தங்கம் தென்னரசு
கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அனுபவத்தின் காரணமாக, அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார். கேள்விகளை எதிர்கொள்ள முடியாத அதிமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்து, குறுக்கீடு செய்து அவரை பேசவிடாமல் அவரது நேரத்தை அபகரித்தனர். அதை தட்டிக் கேட்டபோதுதான், முதல்வர் ஜெயலலிதாவின் கீதாபோதேசம் வெளிப்பட்டது.
“நட்பின் அடிப்படையில் ஒரு ஆலோசனை சொல்கிறேன். நீங்கள் கேள்விகளாகக் கேட்டால் அமைச்சர்கள் இடைமறித்து பதில் சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் பேசவும்”. இதில் ஜெ சொல்ல வருவது, எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்பதுதான்.

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் பணி, சட்டப்பேரவையில் விவாதிப்பதுதான். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் போல் அனைவரும் வெண்சாமரம் வீச வேண்டும் என்று ஜெ நினைக்கிறார்.
அடுத்ததாக தொழிற்துறை மானியத்தில் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போதும் ஜெயலலிதா குறுக்கிட்டார். “மை டியர் யங் மேன்” என்று டி.ஆர்.பி.ராஜாவை பார்த்து ஜெ. விளிக்க, மொத்த பேரவைக்கும் ஆச்சர்யம். ‘என்ன முதல்வர் இப்படி ராஜாவிடம் வாஞ்சையாக பேசுகிறாரே’ என்று. அப்புறம்தான் வழக்கம்போல் தன் டோனுக்கு மாறியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து தொழில் நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா என அடுத்த மாநிலங்களை நோக்கி செல்லும் நிலை குறித்து ராஜா பேச, இடைமறித்த ஜெ, மெட்ரோ ரயில் குறித்து எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார்.

டி.ஆர்.பி.ராஜா
மெட்ரோ ரயில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரும் அல்ல, சட்டமன்ற உறுப்பினரும் அல்ல. அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியது எந்த வகையிலும் நியாயமும் அல்ல. அது முதல்வர் ஜெ-வுக்கும் தெரியும். வேண்டுமென்றே திசைதிருப்பும் நோக்கத்தோடு பேசியதுதான் அது. அதற்குப் பிறகு ராஜாவை பார்த்து, “நீங்கள் வார்த்தையை வைத்து விளையாட முடியாது” என்று சொல்லி அதிமுக உறுப்பினர்களிடம் மேசைத்தட்டல் வாங்கியிருக்கிறார் ஜெ. அந்த மேசைத் தட்டலில் ஓர் ஆனந்தம் அவருக்கு.
இப்படி எல்லாம் பாசமழை பொழிந்த ஜெ, மற்றொரு நாளில் சபாநாயகரை பார்த்து சொன்னதுதான் அவரது உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது. “திமுக உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த சபாநாயகருக்கு ஒரு யோசனை சொல்கிறேன். கச்சத்தீவு மற்றும் மதுவிலக்கு பிரச்னைகள் குறித்து பேசினால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விடுவார்கள். இப்போதும் அப்படிதான் நான் சபாநாயகருக்கு உதவி செய்திருக்கிறேன்” என்று சபாநாயகரை பார்த்து, தன் செய்கை குறித்து பெருமிதப்பட்டிருக்கிறார்.
திமுக உறுப்பினர்களை கோபப்படுத்தி, அவர்களைப் பேச அனுமதிக்காமல் தடுத்தும், அதன் மூலம் ‘அவர்களை வெளிநடப்பு செய்ய வைத்தது நான்தான்’ என வெளிப்படையாக சட்டமன்றத்தில் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார் என்றால், என்னே அவரது ஜனநாயகப் பண்பு. இது குறித்து ஒரு பத்திரிகையும் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், ஜெ-வின் நட்பு ஆலோசனைக் குறித்தும், அன்பு விளிப்புக் குறித்தும் செய்தி வெளியிட்டு புளங்காகிதப்பட்டுக் கொள்கிறார்கள்.
ஜெவும் மாறவில்லை, மக்களும்  மாறப்போவதில்லை!
கட்டுரையாளர்: சிவசங்கர் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

கருத்துகள் இல்லை: