வெள்ளி, 8 ஏப்ரல், 2016

உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் ! காமிராவில் சிக்கியதே...

‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’ என்கிறார் வைகோ. வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!உள்ளத்திலிருந்து சாதி ஆதிக்க உணர்வை அகற்றியவன் முழு போதையில் இருந்தாலும், அவன் வாயிலிருந்து சாதிவெறி வசைச்சொல் வருவதில்லை. திருடுவது குற்றம் என்று பயின்ற ஒரு சிறுவன், பசி கண்ணை இருட்டினாலும், கடையிலிருந்து தின்பண்டத்தைத் திருட கை நீட்டுவதில்லை.
பெண்ணை ஒரு நுகர்வுப் பண்டமாகக் கருதாதவன், பேருந்தில் அழகான ஒரு பெண்ணைக் கண்டு உள்ளம் கிளர்ச்சியுற்றாலும், அவள் மீது அனிச்சையாக கை போடுவதில்லை.

அப்படிக் கை போட்டுவிட்டு, ‘’சாரி, தவறிக் கை பட்டுவிட்டது’’ என்று வருத்தம் தெரிவிப்பவனை, ‘யோக்கியன்’ என்று யாரும் ஏற்பதில்லை.
‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’
வை.கோபாலசாமி கை நீட்டியிருக்கிறார். ரகசியமாக அல்ல, ஊரறிய! திமுக தலைவர் கருணாநிதியை சாதி ரீதியாக இழிவு படுத்தி அவர் பேசியது வாய்தவறிப் பேசியதல்ல. மிகவும் ரசித்து ருசித்துப் பேசினார். ‘ஆதித்தொழில்’ என்று தான் சொல்வதை எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார்.
நாதசுரம் வாசிப்பதை தான் இழிவு படுத்திச் சொல்லவில்லை என்றும், அது தமிழரின் ‘உன்னதக் கலை’ என்றும் நக்கலாகச் சொல்லி, கருணாநிதியை சாதி ரீதியாக இழிவு படுத்துவதற்கு நயம் கூட்டினார்.
பிறகு, சாமர்த்தியமாக ஒரு மன்னிப்பு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த மன்னிப்பு அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.
டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, (மரியாதையைக் கவனியுங்கள்) அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் அவர் மனதில் எண்ணம் இல்லையாம்.
‘’நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத் தெரியும்’’ என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டதாம். சாதியைக் குறித்து சொன்னதாக தான் ஒரு பழிக்கு ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறாராம்.
அப்புறம் தன் மீது கொலைப்பழி சுமத்தியது பற்றி ஒரு நினைவூட்டல். அப்புறம், தான் செய்தது ஒரு ‘வாழ்நாள் குற்றம்’ என்று ஒரு மன்னிப்பு !
‘’நான் அந்தப் பொருளில் பேசவே இல்லை. மனதால் கூட அப்படி நினைக்கவில்லை’’ என்கிறார் வைகோ.
அபாண்டமான பழியில் சிக்கி விட்டோமே என்று தனது நிலையை எண்ணித்தான் அவர் வேதனைப் படுகிறார் என்பதை அந்த அறிக்கையை கவனமாகப் படிக்கும் யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் செய்த தவறுக்கு வைகோ வருந்தி விட்டதாகச் சொல்லி கோப்பை மூடுகின்றன பல ஊடகங்கள்.
‘’அப்படி ஒரு சாதித் திமிர் என்னிடம் இருந்திருக்கிறது. அதை உணர்கிறேன். அவமானத்தால் தலை குனிகிறேன்’’ என்று வைகோ சொல்லியிருந்தால் அது யோக்கியமான பேச்சு.
‘’நான் சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது கலைஞருக்கே தெரியும்’’ என்கிறார் வைகோ. அப்புறம் யாரை ஏமாற்றுவதற்கு மன்னிப்பு நாடகம்?
எஸ்.எஸ்.சந்திரன் போன்ற அதிமுக சில்லறைகள், கருணாநிதியை ‘’திருக்குவளை தகரப்பெட்டி, சவரக்கத்தி’’ என்று மிகவும் ரசித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத சாதித்திமிருடன்தான் வைகோ வின் பேச்சு அமைந்திருந்தது.  இதை வீடியோவைப் பார்க்கும் எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்.
‘’ஆமாம். நான் பாப்பாத்திதான்’’ என்று சட்டமன்றத்திலேயே பேசியவர் ஜெயலலிதா. அவருடைய ஆணவத்தை அவர் பிறந்த சாதியுடன் தொடர்பு படுத்தி எப்போதாவது வைகோ பேசியிருக்கிறாரா? ஆதித்தொழில், நாதசுரம் என்பனவற்றை மிகவும் ரசித்துப் பேசினாரே, அப்படி அம்மையார் பிறந்த சாதியின் தொழிலைக் கேலி செய்து பேசிய வீடியோ இருந்தால் அதைப் பார்க்க விரும்புகிறோம்.
வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!
‘’ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல்’’ என்று திருமாவளவனும், ‘’சாதீய தொழில் குறித்து தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல’’ என்று ராமகிருஷ்ணனும் வைகோ வின் பேச்சு குறித்து தெரிவித்திருக்கின்றனர். இதற்குப் பெயர் கண்டனமாம்!
‘’சங்கரைப் படுகொலை செய்தது எங்களுக்கு ஏற்புடையதல்ல, இது தேவையற்ற செயல்’’ என்பது போன்ற பாணியில்தான் உடுமலைக் கொலை பற்றி பாமக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.
‘’அதுவும் இதுவும் எப்படி ஒன்றாகும்? வைகோ என்ன அரிவாள் எடுத்தா வெட்டினார்?’’ என்று ராமகிருஷ்ணன் கேட்பார். ‘’சவரக்கத்தியும் அரிவாளும் எப்படி ஒன்றாக முடியும்?’’ என்று எஸ்.எஸ்.சந்திரன் கேட்பார்.
நாம் என்ன பதில் சொல்ல முடியும்?
– தொரட்டி வினவு.கம

கருத்துகள் இல்லை: